நடிப்பு: கமல்ஹாசன், மோகன் லால், லஷ்மி, கணேஷ் வெங்ட்ராம், அனுஜா ஐயர்
இசை: ஸ்ருதிஹாசன்
ஒளிப்பதிவு: மனோஜ் சோனி
கலை: ‘தோட்டா’ தரணி
படத்தொகுப்பு: ராமேஷ்வர் பகவத்
தயாரிப்பு: ராஜ்கமல் இண்டர்நேஷனல், யூ.டி.வி.
ஒரு சராசரி மனிதனின் சமூகக் கோபமே உன்னைப்போல்ஒருவன். ஒரே நாளில் நடந்து முடிகிறது கதை. காவல் நிலையம், ரயில், பேருந்து, ஷாப்பிங் மால் என பொதுமக்கள் பெருமளவில் கூடுகிறஇடங்களாகப் பார்த்துப் பார்த்து குண்டு வைக்கிறார் கமல். சென்னை மாநகர் போலீஸ் கமிஷன்ர்மோகன்லாலுக்கு தொலைபேசி மூலம் தெரிவித்து, தன்னுடையநிபந்தனையைச் சொல்கிறார். ஒரு சேனலுக்கும் தொலைபேசி மூலம் காவல்நிலையத்தில் குண்டுவைத்திருப்பதைச் சொல்கிறார். முதலில் அநாமதேய கால் என்று நினைக்கும் காவல்துறை, காவல்நிலையத்தில் கமல் சொன்னதைப் போலவே ஆர்.டி.எக்ஸ்வெடிகுண்டைக் கண்டுபிடித்த பிறகு சுறுசுறுப்பாகிறது.
அதேபோல பல இடங்களில் வைக்கப்பட்டிருக்கும்வெடிகுண்டு வெடிக்காமல் இருக்க, நான்குதீவிரவாதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது கமலின் நிபந்தனை. மும்பை, கோவை என்று பல இடங்களில் வெடிகுண்டுகளைவெடிக்கச்செய்து,பல ஆயிரக்கணக்கான அப்பாவிகள் இறந்துபோககாரணமாக இருந்த மூன்று முஸ்லீம் பேர் கொண்ட தீவிரவாதிகளையும், ஓர் இந்து பேர் கொண்ட தீவிரவாதியையும் விடுவிக்கசொல்லும் கமலின் நிபந்தனையை ஏற்றுக்கொண்டாலும், ‘பொது மனிதன்‘எனும் பெயரில் குண்டுகளை வைக்கும் கமல்ஹாசனைகண்டறியும் முயற்சிகளும் தொடர்கிறது. விடுவிக்கப்படும் தீவிரவாதிகளை ஒரு ஜீப்பில்ஏற்ற சொல்கிறார் கமல். கொஞ்ச நேரத்தில் அந்த ஜீப் வெடித்துச் சிதறுகிறது.தீவிரவாதிகள் ஏன் கொல்லப்பட்டனர், பொதுஇடங்களில் கமல் வைத்த வெடிகுண்டுகள் வெடிக்கின்றனவா? ‘பொதுமனிதன்‘ எனும்பெயரில் வெடிகுண்டு விளையாட்டு விளையாடுகிற கமலை, காவல்துறை கண்டுபிடித்ததா? போன்ற கேள்விகளுக்கு ‘க்ளைமாக்ஸ்‘ பதில்சொல்கிறது.

இந்தியில் எடுக்கப்பட்ட ‘ஏ வெட்னஸ்டே‘ படத்தின்ரீமேக் வடிவம் உன்னைப்போல் ஒருவன். இந்தியில் இருந்த சில சிக்கலான விஷயங்களை மிகலாவகமாக மாற்றி எடுத்திருக்கிறார்கள். கமல்ஹாசன், மோகன்லால் எனும் இரண்டு நடிப்பு இமயங்கள் சேர்ந்துநடிக்கிறார்கள் என்பது படத்திற்கு எதிர்ப்பார்ப்பு ஏற்படுத்துகிறது. பொது மனிதனாககமல். போலீஸ் கமிஷனாரக மோகன்லால். இருவரும் நடிப்பில் தாண்டவம் ஆடுகிறார்கள்.அதிலும் போலீஸ் கமிஷனராக மோகன்லால் ஒவ்வொரு ப்ரேமிலும் விஸ்வரூபம் எடுக்கிறார்.அலட்சிய பார்வை,அதிரடி உத்தரவு, இயலாமையின் கோபம், அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்கிற பரிதவிப்பு எனகிடைக்கிற அத்தனை பந்துகளையும் அதிரடி சிக்ஸர்களாக்குகிறார்.
அலுவலகத்திலிருந்து வீட்டுக்குக் காய்கறிவாங்கிக்கொண்டு போகிற மிஸ்டர் பொதுஜனமாக கமல். வெறும் வசன உச்சரிப்புகளிமும், முகபாவனைகளிலும் ஸ்கோர் செய்தாக வேண்டும். மதங்களின்பெயரால் பல இடங்களில் குண்டுகளை வைக்கிற தீவிரவாதிகளை, அதே தீவிரவாதத்தால் அழிக்க வேண்டும் என்ற கருத்துடையமனிதனின் கோபத்தை நடிப்பால் பதிவு செய்கிறார்.. பதட்டமில்லாமல் பல இடங்களில் வெடிகுண்டுகளை வைக்கும்போதும், சான்ட்விச் சாப்பிட்டுக்கொண்டே, காபி குடித்துக்கொண்டே அரசாங்கத்தை தான்நினைக்கும்படி ஆட்டுவிக்கும்போதும், பதறவைக்கும் செயலை செய்யும்போது மனைவியிடம், ‘தக்காளி வாங்கிட்டேன்‘ என்றுசொல்லும்போதும் அப்ளாஸை அள்ளுகிறார். அதிலும் குஜராத் மதக்கலவரங்களை நினைவூட்டும்விதமான விவரிப்பில் கண்ணில் நீர் வரவழைக்கிறார். துப்பாக்கியால் தன் கண்ணீரைதுடைத்துகொள்வது வலியைச் சொல்லும் காட்சிக் கவிதை.
மதங்களின் பெயரால் நிகழ்கிற தீவிரவாதம் பற்றி பேசவருகிற பெரும்பாலான படங்கள் இஸ்லாமிய மக்களின் மீது வெறுப்பைப் பதிவு செய்வது வழக்கம். இந்தியில்இப்படம் எடுக்கப்பட்டபோதும் இதே விமர்சனத்தைச் சந்தித்தது. உன்னைப்போல் ஒருவன்அதிலிருந்து கொஞ்சம் வித்தியாசபடுகிறான். தீவிரவாதம் என்கிற வார்த்தையில் நஞ்சைகலந்து ஒரு குறிப்பிட்ட மதத்தினர்மேல் காழ்ப்புணர்ச்சியை வளர்க்கும் பொறுப்பற்றசெயல் உலகம் முழுவதும் நடந்து வருகிறது. எதிர்தரப்பின் இன்னொரு கோர முகத்தைப்பற்றியும் பதிவு செய்திருப்பது இப்படத்தின் சிறப்பு. மும்பை, கோவை குண்டுவெடிப்புகளை பேசுவதோடு, குஜராத் கலவரத்தின்போது சிறுபான்மை சமூகம்அதிகாரத்தின் அனுமதியோடு சித்ரவதை செய்யப்பட்டதையும் பேசுகிறது படம்.

அசாதாரண சம்பவங்களும் வெகு சாதாரணமாக நடந்துவிடுவதால் சில இடங்களில் படத்தோடு ஒன்ற முடியவில்லை. சாதரண பொதுமனிதனின் பிம்பத்தில் கமல்ஹாசனை பொருத்தி பார்க்ககொஞ்சம் நேரம் எடுக்கிறது. அரசின் தலைமைச் செயலாளராக வரும் லஷ்மியின் பாத்திரம்செயற்கையாக இருக்கிறது. ‘தன்னுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் விடுபட்டது‘வரை படத்தில் கொட்டித் தீர்த்துவிடுகிறார் கமல். ஒருபொதுமனிதனின் கோபத்தை அழுத்தமாக சொன்ன இயக்குனர் சக்ரி, அந்தக் கோபத்திற்கான காரணத்தை விளக்கவில்லை.காட்சிகளாக இல்லாமல்,வெறும் வசனங்களால் கோபம் விவரிக்கப்படுவதால், ‘அதிக பிரசங்கி பொதுமனிதனே‘ கண் முன் நிற்கிறார். பொதுமனிதனை கண்டுபிடிக்கும்தருணத்தில் கமிஷனர் முதல் சாதரண ஆள் வரையில், அந்தக்கோபத்தை ஆதரிக்கும் விதம் பக்கா சினிமாத்தனம்.
எழுத்தாளரான இரா. முருகன் இப்படத்தில் வசனம்எழுதியிருக்கிறார். கதையின் கரு தீவிரவாதமாக இருப்பதால் வசனங்கள் கத்திமேல் நடக்கவேண்டிய கட்டாயம். கச்சிதமாக செய்திருக்கிறார். வசனங்களின் பல இடங்களில் கமலும்தெரிகிறார்.
போலீஸ் கமிஷனர் அலுவலகம், கட்டுமான பணிகள் நடக்கும் ஒரு கட்டிடத்தின் மொட்டைமாடி ஆகிய இரண்டு லொக்கேஷன்களிலேயே கதை நடக்கிறது. விதவிதமான கோணங்களில் இரண்டுஇடங்களையும் காட்சி படுத்தியவிதத்திற்கு மனோஜ் சோனியின் ஒளிப்பதிவுக்கு ஒரு சபாஷ்போடலாம்.
இப்படத்தின் மூலம கமலின் மகள் ஸ்ருதிஹாசன்இசையமைப்பாளராக அறிமுகமாகியிருக்கிறார். ‘அட‘ போட முடியாவிட்டாலும், பாஸ் மார்க் வாங்குகிறார். கலை இயக்குனர் தோட்டா தரணியும், படத்தொகுப்பாளர் ராமேஷ்வர் பகத்தும் தங்களின் பணியைநிறைவாக செய்திருக்கிறார்கள்.
சராசரி பொதுமனிதனை பிரதிபலிக்கும் ‘உன்னைப் போல் ஒருவனை’ நிச்சயம் வரவேற்கலாம்.
- தெனாலி விமர்சன குழு.