போர்க்குற்ற விசாரணை நீதிமன்றம் அமைத்தது இலங்கை ராணுவம்
கொழும்பு:
 
டந்த 2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுடனான போரின்போது தமது வீரர்கள் செய்த போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்தப் போவதாக இலங்கை ராணுவம் முதல் முறையாக அறிவித்திருக்கிறது.

இதற்காக 5 நபர் கொண்ட விசாரணை நீதிமன்றத்தை அமைத்து ராணுவத் தளபதி ஜகத் ஜெயசூர்ய உத்தரவிட்டிருக்கிறார்.போர் மற்றும் அதைத் தொடர்ந்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட போர்ப் படிப்பினை மற்றும் நல்லிணக்க ஆணையத்தைப் போன்ற முதல் நிலை உண்மையறியும் அமைப்பாக இந்த நீதிமன்றம் செயல்படும். இது ராணுவ நீதிமன்றமாகும்.

யாரேனும் போர்க்குற்றம் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதற்கான ஆதாரங்கள் நீதிமன்றத்துக்குக் கிடைக்கப்பெற்றால், அவர் மீது விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்படும் என்று ராணுவம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின்போது, அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், சரணடைந்த விடுதலைப் புலிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகவும் சேனல் -4 தொலைக்காட்சி போன்ற ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.இந்த நிலையில், ஜெனீவாவில் நடக்க இருக்கும் ஐ.நா. மனித உரிமைகள் அமைப்பின் கூட்டத் தொடரில், இலங்கைகைக்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்பட இருக்கிறது.

அதை ஆதரிக்கப் போவதாக அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் அறிவித்திருக்கின்றன. இதனால் ஏற்பட்ட நெருக்கடியை அடுத்து, முறையாக போர்க்குற்ற விசாரணை நடத்துவதற்கு இலங்கை சம்மதம் தெரிவித்திருக்கிறது.
இலங்கை