இலங்கை பிரச்னையில் தமிழர்களுக்கு எதிரானது காங்கிரஸ் அரசு: பழ. நெடுமாறன் குற்றச்சாட்டு
தஞ்சாவூர்:
 
"த்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு தமிழர்களுக்கு எதிரானது`` என்றார் உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன்.

தஞ்சாவூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழர் கலை இலக்கிய விழாவின் நிறைவு நாளில் அவர் பேசினார்.

"இலங்கையில் ஒரு கோடி சிங்களர்கள் வாழ்கின்றனர். ஈழப் போருக்கு முன்னதாக அங்கு 45 லட்சம் தமிழர்கள் இருந்தனர். அவர்களில் 3 லட்சம் பேர் கொல்லப்பட்டுவிட்டனர். 5 லட்சம் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இன்னும் 5 லட்சம் தமிழர்கள் இலங்கையிலேயே அகதிகளாக, சிங்களர்களின் கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர்.
 
இப்போது ஈழத்தில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுவிட்டது. தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் சிங்களர்கள் குடிபெயர்ந்து, அங்கிருந்த தமிழ் அடையாளங்களை அழித்து வருகின்றனர்.

ஈழத்திலிருந்து 20 மைல் தொலைவில் உள்ள தமிழகத்தில் 7 கோடி தமிழர்கள் உள்ளனர். இருந்தும், ஈழப் போருக்கு எதிராகத் தமிழகத்தில் எழுந்த எதிர்ப்புகள், போராட்டங்கள் குறித்து ராஜபக்சே பயம் கொள்ளவில்லை.
 
ஏழு கோடித் தமிழர்களின் கொந்தளிப்புகள் ராஜபக்சேவுக்கு பயத்தை ஏற்படுத்தாதற்குக் காரணம் இந்திய அரசும், அதற்கு வால்பிடித்து வந்த முந்தைய திமுக அரசும்தான். தமிழர்களின் குரல்களை இந்திய அரசு மதிக்காததற்கும், அன்றைய திமுக அரசுதான் காரணம். தமிழர்கள் வரலாற்றில் மாறாத அவமானக் கறையாக இந்த நிகழ்வுகள் அமைந்துவிட்டன.

இந்தக் கறையைத் துடைத்தெறிய, தமிழர்களுக்கு எதிரான அரசுகளையும், கட்சிகளையும் அடையாளம் கண்டு ஒதுக்க வேண்டும் என்று நாம் சபதமேற்க வேண்டும். மீண்டும் பிரபாகரன் தலைமையில் ஈழத்தில் தமிழ் விடுதலைப் போர் வெடிக்கும்`` என்றார்
பழ.நெடுமாறன்.
இலங்கை