ராமேசுவரத்தில் ராஜபக்சே உறவினர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்த 7 பேர் கைது
ராமேசுவரம்:
 
லங்கை அதிபர் ராஜபட்சேவின் மைத்துனரைத் தாக்கியதாக ம.தி.மு.க., நாம் தமிழர் இயக்கத்தினர் 7 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.

இலங்கை அதிபர் ராஜபட்சே தங்கையின் கணவர் திருகுமரன் நடேசன். இவர் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர். இவர் ராமநாத சுவாமி கோவிலில் தரிசனம் செய்வதற்காக திங்கள்கிழமை இரவு ராமேசுவரம் வந்து தங்கினார். செவ்வாய்க்கிழமை காலை நடுத்தெருவில் உள்ள புரோகிதர் வீட்டில் சிறப்பு பூஜை செய்தார்.

இது குறித்து தகவலறிந்த மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் சிலர், புரோகிதரின் வீட்டின் முன்பு திரண்டு ராஜபட்சேவுக்கு எதிராக கோஷமிட்டு நடேசனுக்கு கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் பூஜை முடிந்து, வீட்டில் இருந்து நடேசன் வெளியில் வந்தார். அப்போது அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் நடேசன் மீது காலணி வீசித் தாக்கி, அவரது கையைப் பிடித்து இழுத்ததாகக் கூறப்படுகிறது. இதில் போலீஸாருக்கும், கட்சி நிர்வாகிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் கூடுதலான போலீஸார் விரைந்து வந்து மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தினரை அப்புறப்படுத்திவிட்டு, நடேசனை காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்தச் சம்பவத்தில் நடேசனுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து புரோகிதர் அனந்தபாலு, நகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகத்திடம் புகார் கொடுத்தார். அதன்படி மதிமுக மாநில இளைஞரணி துணைச் செயலர் கராத்தே பழனிச்சாமி, நாம் தமிழர் இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கண்.இளங்கோ மற்றும் மதிமுக, நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த நம்புகுமார், வெள்ளைச்சாமி, பாலு, சின்னதம்பி, திருமுருகன் ஆகிய 7 பேர் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் 7 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இலங்கை