சிங்களத்தில் மட்டுமே தேசிய கீதம் பாடச்சொல்வது சட்டவிரோதம்: இலங்கை அமைச்சர்
கொழும்பு:
 
லங்கையின் தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டும் தான் பாடப்பட வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது சட்ட விரோதமான செயலாகும். இது ஒரு சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயல் என்று தேசிய மொழிகள் சமூக ஒருங்கிணைப்பு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற வினாக்கள் நேரத்தின் போது ஐ.தே.க எம்.பியான தயாஸ்ரீ ஐயசேகர எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக எழுந்த ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.யான தயாஸ்ரீ ஐயசேகர இலங்கை தேசிய கீதம் சிங்கள மொழியில் மட்டுமே இசைக்கப்படல் வேண்டுமென சட்டம் தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றனவா? ஆமெனில் இத்தகைய சட்டம் தயாரிக்க ஏதுவான காரணங்கள் எவை? தேசிய கீதத்தை தான் விரும்பிய மொழியைப் பாவிக்க அரசியலமைப்பினால் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமை மேற்படி நிலையின் கீழ் மீறப்படவில்லையா? இதன் காரணமாக சிங்கள மக்களுக்கும் ஏனைய இன மக்களுக்கும் இடையிலான பரஸ்பர உறவுக்கு தாக்கம் ஏற்படுத்துமா? என்பது போன்ற கேள்விகளைக் கேட்டிருந்தார்.

இக்கேள்விகளுக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார பதிலளிக்கையில், இலங்கையின் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் தான் பாட வேண்டும் என்ற சட்டத்தை இயற்றுவதற்கு எவ்விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. தேசியக் கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்று கூறுவது சட்ட விரோதமானது.

இது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் ஒரு குழப்பமான நிலைமை ஏற்படுத்தப்பட்டுள்ளது. சில அதிகாரிகளின் தான்தோன்றித்தனமான செயற்பாட்டினால் தான் குழப்பமான நிலை ஏற்படுத்தப்பட்டது. இலங்கை தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டுமே பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தேசியக் கீதத்தை தாம் விரும்பிய மொழியில் பாடலாம் என்று அந்தக் குழப்பமான நிலைமை தீர்த்து வைக்கப்பட்டது என்றார்.
இலங்கை