ராஜபக்சேவுக்கு எதிராக ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் போர்க்குற்ற வழக்கு
மெல்போர்ன்:
 
ஸ்திரேலியாவின் விக்டோரியா நகர நீதிமன்றத்தில் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக போர்க் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்துள்ள ஓய்வுபெற்ற பொறியாளர் ஜெகன் வாரன் என்பவர் இந்தக் குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளார். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் பெர்த் நகரில் நடைபெறவுள்ள நிலையில் இந்தக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஜெகன் வாரன் தனது மனுவில் கூறியுள்ளதாவது:
2009 மே மாதத்தில் இலங்கையில் உள்நாட்டுப் போர் இறுதிக்கட்டத்தை எட்டியபோது, மருத்துவமனைகளிலும் மக்கள் தங்கவைக்கப்பட்ட முகாம்களிலும் நடந்த கொடுமைகளை நான் நேருக்குநேர் கண்டேன். அவை இன்னமும் என் மனதை அலைக்கழித்துக் கொண்டிருக்கின்றன.

மக்கள் புழங்கும் இடங்களை குறிவைத்துத் தாக்கியது ராணுவம். மருத்துவமனை, பொதுமக்களின் முகாம்கள் அவர்கள் தாக்குதலில் இருந்து தப்பவில்லை. இன்றைக்கும் இலங்கையில் தமிழர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றால் அது உண்மையில் அதிசயம்தான். அவர்கள் மரணத்திலிருந்தோ படுகாயங்களிலிருந்தோ எப்படியோ தப்பிப் பிழைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகள் கொல்லப்பட்டனர்; சிகிச்சை பெறக் காத்திருந்தவர்கள் கொல்லப்பட்டனர். மருந்துகள் வைக்கப்பட்டிருந்த அறை தகர்க்கப்பட்டது. ஆம்புலன்ஸýகள் நொறுக்கப்பட்டன. இவற்றையெல்லாம் நான் நேரில் கண்டேன்.

2008 கிறிஸ்துமஸ் தினத்திலும் மருத்துவமனைகள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்தச் சம்பவங்கள்தான் இலங்கை அதிபருக்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுகளை பதிவு செய்ய என்னைத் தூண்டியது. ஏனெனில் அவர் அந்நாட்டின் அதிபர் மட்டுமல்ல, அந்நாட்டு ராணுவத்தின் தலைமை தளபதியும் ஆவார். எனவே, அவருக்குத் தெரியாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப்பில்லை. நடந்த போர்க்குற்றங்களுக்கு அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளார் என்றார் ஜெகன் வாரன்.

இதுகுறித்து வாரனின் வழக்குரைஞர் ராப் ஸ்டேரி கூறியதாவது:எங்கள் புகாரை ஆஸ்திரேலிய ஃபெடரல் போலீஸின் ஆணையருக்கும் காமன்வெல்த் அட்டர்னிக்கும் அனுப்பியுள்ளோம். காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் கூட்டம் ஆஸ்திரேலியாவில் பெர்த் நகரில் நடக்கவுள்ளது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு ராஜபட்ச வரவுள்ளார். நீங்கள் விசாரணை நடத்த இது தகுந்த தருணம் என்று அவர்களுக்கு எடுத்துரைத்துள்ளோம் என்றார் ராப் ஸ்டேரி.

ராஜப
க்சேவுக்கு எதிரான புகார் குறித்து இலங்கை அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: இப்போதைய வழக்கு நடவடிக்கைகள் எல்லாம் ஆஸ்திரேலியாவின் சட்டம் சம்பந்தப்பட்டதாகும். பொது சர்வதேச சட்டத்தை மீறிய செயலாகவே இதனைக் கருதுகிறோம் என இலங்கை கூறியுள்ளது.

இந்த வழக்கு நடவடிக்கைகள் குறித்து கருத்துத் தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் ஜூலியா கில், ஆஸ்திரேலிய கூட்டரசின் சம்மதம் இன்றி இலங்கை அதிபருக்கு எதிரான போர்க் குற்றச்சாட்டுகளை விசாரிக்க முடியாது. எனெனில், இதற்கு அட்டர்னி ஜெனரலின் அனுமதி தேவை என்றார்.
இலங்கை