இலங்கையிடமிருந்து கச்சத் தீவை திரும்பப் பெறவேண்டும்: பா.ஜ.க.
டெல்லி:
 
லங்கைக்குத் தாரை வார்க்கப்பட்ட கச்சத் தீவை மீண்டும் இந்தியா திரும்பப் பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் சட்டம் மற்றும் சட்டம் இயற்றும் பிரிவு வலியுறுத்தியுள்ளது.
 
டெல்லியில் பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் அந்தப் பிரிவின் தேசியக் கருத்தரங்கு சனிக்கிழமை நடைபெற்றது. நாடு தழுவிய அளவில் இருந்து சட்ட வல்லுநர்கள் கலந்து கொண்ட அந்தக் கூட்டத்தில், இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப் படுவதைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
கருத்தரங்கில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்:  நீதிபதிகள் நியமனத்தில் தேசிய அளவில் வெளிப்படத் தன்மை தேவை. இதற்காக தேசிய நீதித் துறை ஆணையம் அமைக்கப்படவேண்டும்.  வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை உடனடியாக நமது நாட்டுக்குக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளையும், மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.  இந்த விவகாரத்தில் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை திருப்திகரமாக இல்லை.
 
எனவே, உடனடியாக தக்க நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.  ஊழலுக்கு எதிராக நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களை மத்திய அரசு நசுக்கி வருவது கண்டிக்கத் தக்கது. தில்லியில் எமர்ஜென்சி நிலை ஏற்பட்டிருப்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை மத்திய அரசும், மாநில அரசும் ஏற்படுத்தியிருப்பது கண்டிக்கத்தக்கது.  இது போன்ற நடவடிக்கைகளில் மத்திய அரசும், டெல்லி அரசும் ஈடுபடக்கூடாது.
 
இதே நிலைமை தொடர்ந்தால், பா.ஜ.க. சார்பாக உச்ச நீதிமன்றத்தை நாடித் தீர்வு காண்பதைத் தவிர வேறு வழி இல்லை.  இந்திய மீனவர்கள், குறிப்பாக தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதும், கொல்லப்படுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.  இதன் காரணமாக மீனவர் சமுதாயத்தினர் இடையே பதற்றம் நிலவுகிறது.
 
எனவே, மத்திய அரசு தமிழக மீனவர்களின் உயிர்களைப் பாதுகாக்கும் வகையில் பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், இது போன்ற நடவடிக்கைகளில் இலங்கை கடற்படை மீண்டும் ஈடுபடுவதைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை வலியுறுத்தவேண்டும் எனத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
 
 தேசிய கருத்தரங்கில் பாஜக தமிழக சட்ட பிரிவின் தலைவர் ஸ்ரீதர் மூர்த்தி, துணைத் தலைவர் பி. ராமரத்தினம், ஒருங்கிணைப்பாளர் பிரபாகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இலங்கை