முகாம் தமிழர்கள் மறுவாழ்வு இலங்கைத் தூதரிடம் முதல்வர் ஜெ. வலியுறுத்தல்
சென்னை:
 
மிழக மீனவர்கள் மீதான தாக்குதல்கள் தடுக்கப்பட வேண்டும் என இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசத்திடம் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.இலங்கை முகாம்களில் தங்கியுள்ள தமிழர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு விரைவில் திரும்பிச் சென்று மறுவாழ்வு பெறுவதை அந்த நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தினார்.  
 
இதை இலங்கை அதிபரிடம் தெரிவிக்குமாறு இலங்கைத் தூதரை முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டதாக தமிழக அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்தச் சந்திப்பின்போது, தென் இந்தியாவுக்கான இலங்கைத் துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.  சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பிரசாத் கரியவாசம் கூறியதாவது:  முதல்வர் ஜெயலலிதாவை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினேன்.
 
அவர் தேர்தலில் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றதற்காக அவருக்கு இலங்கை அதிபர் ராஜபட்ச வாழ்த்துத் தெரிவிக்கச் சொன்னார்.  இலங்கைத் தமிழர்கள் விரைவில் மறுவாழ்வு பெற்று அவர்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகளை விரைந்து செயல்படுத்தி வருகிறோம்.  தமிழகத்துக்கும்-இலங்கைக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்து வருகிறது. அதை மேம்படுத்துவது தொடர்பாகவும் இந்தச் சந்திப்பில் விவாதிக்கப்பட்டது என்று பிரசாத் கரியவாசம் தெரிவித்தார். 
 
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் சென்னையில் புதன்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசியபோது, இலங்கையில் உள்ள அனைத்து மக்களுக்கும் சமவாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றார்.  மேலும், முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியபோது, இலங்கைத் தமிழர்களை மீள்குடியேற்றம் செய்வதற்கான நடவடிக்கையில் துணை நிற்பதாக ஹிலாரி உறுதி தெரிவித்தார்.  ஹிலாரியின் இந்தப் பேச்சுகளைத் தொடர்ந்து, இலங்கைத் தூதர் பிரசாத் கரியவாசம் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை