மேடை முழக்கங்களால் ஈழ விடுதலையை பெற முடியாது: அரிமாவளவன் பேச்சு
புதுவை:
 
``மிழீழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டுவது போன்றது`` என்று தமிழர் களம் அரிமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் செந்தமிழர் இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட பாவலரேறு விழா நடைபெற்றது.  இந்த விழாவில் தமிழர் களம் பொதுச் செயலாளர் அரிமாவளவன் கலந்து கொண்டு பேசியது...``முள்ளிவாய்க்கால் நிகழ்வு என்பது அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக ஈழ மண்ணில் நடந்து வருகிற ஓர் இன அழிப்புக் கொடுமைகளின் ஒரு பகுதி. இப்படித்தான் தமிழினம் அங்கு காலாகாலமாக அழிக்கப்பட்டு வருகிறது என்பதை உறங்கிக் கிடந்த உலகிற்கு உசுப்பிச் சொன்ன ஓர் நிகழ்வு. அறுபது ஆண்டுகளாக ஈழத்தில் நடக்கிற அக் கொடுமைகள் ஈராயிரம் ஆண்டுகளாக உலகப்பரப்பில் தமிழருக்கு நடக்கும் அநீதிகளுக்கு மற்றுமொரு சாட்சி.

கன்னடக் களப்பிரர்கள் 300 ஆண்டுகள் தமிழர் நிலத்தை ஆக்கிரமித்து ஆண்டபோது தமிழரின் தலைகளைக் கொய்து மதுரையைச் சுற்றி அடுக்கி வைத்துக் கொக்கரித்தார்கள் என்பது வரலாறு. ஆக, ராசபக்சேக்களும், கோத்தபாயாக்களும் அன்றே இருந்திருக்கிறார்கள்!

ஈழ விடுதலையை இங்குள்ள மேடைகளில் முழங்கியே நான் பெற்றுத் தருவேன் என்பது கூரையேறிக் கோழி பிடிக்க இயலாதவன் வானம் ஏறி வைகுண்டத்திற்கு வழி காட்டும் வம்படி வீரர்கள்.

தமிழர் தேசியம் மலர வேண்டுமென்றால் நாம் அயராது பாடுபட வேண்டும். அப்படிப் பாடுபடுவது என்பது மாதமொருமுறை நடத்தும் கருத்தரங்குகளில் கேட்ட கருத்துக்களையே மீண்டும் மீண்டும் கேட்க, கேட்டவர்களே மீண்டும் மீண்டும் கூடுவது அல்ல. அல்லது உண்ணா நோன்பு போன்ற போராட்டங்கள் வழியில் நம்மை நாமே வருத்திக் கொள்ளவதுமில்லை. நமது கருத்துக்களை நமது குடும்ப உறுப்பினர்கள், உற்றார், உறவினர்கள் என்ற அளவிலே முதலில் பரப்பிட வேண்டும். பின்னர் அதுவே பரந்துபட்டத் தளங்களுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

நமது இளைய தலைமுறைக்கு நமது நண்பர் யார்? எதிரி யார்? என்ற அடிப்படைப் பாடங்களைச் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் இது போராடும் காலம். விடுதலையை விழிகளில் தாங்கி விடுதலை நெருப்பை நெஞ்சில் ஏந்தி நடை போட வேண்டிய நேரமிது. நம்மில் இருக்கும் சிறு சிறு பூசல்களைக் கொளுத்திப் போட்டுவிட்டு தமிழர் தேசியம் காண கரம் கோர்ப்போம்`` என்றார் அரிமாவளவன்.

விழாவில் ந.மு. தமிழ்மணி, சொல்லாய்வறிஞர் அருளியார், தமிழர்களத்தின் புதுவை மாநிலச் செயலாளர் பிரகாசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கை