“திட்டக்குடி”க்கு கூடியது கூட்டம்


புதுமுகம் ரவி, அஸ்வதா நடிப்பில் இயக்குனர் சுந்தரன் இயக்கி வெளிவந்துள்ள “திட்டக்குடி” படம் திரையிடப்பட்டிருக்கும் விருத்தாச்சலம் ஜெய்சாய்கிருஷ்ணா தியேட்டருக்கு பொதுமக்கள் திரண்டுவந்துள்ளனர். படம் பார்ப்பதற்காக அல்ல படத்தைத் திரையிடக்கூடாது என்பதற்காக.

கொத்தனார், சித்தாள் இவர்களின் வாழ்வியலை சொல்லும் இப்படத்தில் படத்தின் நாயகன் பாலியல் தொழிலாளர்களுடன் தொடர்பு வைத்திருப்பவராக கதையுள்ளதாம். அப்படத்தின் ஒரு காட்சியில் ஒரு பெண்ணிடம், உனக்கு எந்த ஊர் என்று நாயகன் கேட்க அவர் காருமாங்குடி என்று கூறுகிறாராம். இந்த காருமாங்குடி கிராமம், விருத்தாச்சலம் அருகே உள்ளது.

தங்களது ஊர்ப் பெண்களை இழிவுபடுத்துவது போல் வசனம் இருப்பதாக கருதிய காருமாங்குடி கிராம மக்கள், விருத்தாச்சலம் ஜெய்சாய்கிருஷ்ணா தியேட்டருக்கு திரண்டுவந்து படத்தைத் திரையிடக்கூடாது என்று போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

இதைத் தொடர்ந்து போலீஸார் விரைந்துவந்து பொதுமக்களை சமாதானப்படுத்திய பின்பும் அமைதியடையாத மக்கள் படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா செல்வன் அந்த வசனம் இடம்பெறும் காட்சி வரும்போது தியேட்டரில் சத்தம் இல்லாமல் செய்து விடுகிறோம் என்று கூறியப் பிறகுதான் பொதுமக்கள் அமைதியுடன் கலைந்து சென்றுள்ளனர்.
சினிமா