என்றென்றும் சிவாஜி


நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் ஒன்பதாவது நினைவு தினம் கடந்த வெள்ளியன்று கடைபிடிக்கப்பட்டது. அவரது நினைவு தினத்தைக் கொண்டாடும் விதமாக அவரும், சரோஜாதேவியும் நடித்து 1964 ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றி பெற்ற படமான “புதிய பறவை” படத்தை அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டரில் திரையிட்டனர்.

இப்படம் திரையிட்டதையொட்டி சாந்தி தியேட்டர் சிவாஜி ரசிகர்களின் ஏற்பாட்டால் கொடி, தோரணங்கள் என்று ஜொலித்தது. அதுமட்டுமில்லாமல் சிவாஜியின் 40 அடி உயர கட் அவுட்டையும் நிறுவிள்ளனர். தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடும் இப்படத்தை சிவாஜி ரசிகர்கள் குடும்பத்தோடு வந்திருந்து கண்டு ரசிக்கின்றனர். முதல் இரு நாட்கள் டிக்கெட் கிடைக்காமல் பலர் திரும்பி சென்றனர். ஞாயிற்றுக்கிழமை 80 ரூபாய் டிக்கெட் ரூ.150-க்கு பிளாக்கில் விற்கப்பட்டதாக படம் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் கூறினார்.

இதுபற்றி சிவாஜியின் மகனும் நடிகருமான பிரபு கூறியவதாவது: “புதிய பறவை படம் பார்க்க கூட்டம் கூட்டமாய் ரசிகர்கள் நிறைய பேர் என்னை தொடர்பு கொண்டு டிக்கெட் கேட்டனர். இதையெல்லாம் பார்த்தபோது எனக்கு அதிர்ச்சியாய் இருந்தது. புதிய பறவை படம் வெளிவந்த போது சாந்தி தியேட்டரில் இந்திப் படமான சங்கம் படம் ஓடிக்கொண்டிருந்தது. எனவே புதிய பறவை படம் பாரகன் தியேட்டரில் வெளியிடப்பட்டது” என்று கூறினார்.


புதியப்படங்கள் வெளியான ஓரிரு நாளிலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்படும் இக்கால கட்டத்தில் 46 வருடங்களுக்கு பிறகும் சிவாஜி படம் பார்க்க ரசிகர்கள் திரண்டது வியப்பாக இருந்தது என்று தியேட்டர் ஊழியர் ஒருவர் கூறினார். சிவாஜியின் திரை ஆளுமை வேறு யாருக்குமில்லை என்பதை மெய்பிக்கும் விதமாக அவரை திரையில் பார்த்து ரசிகர்கள் பூக்களை அள்ளி வீசினார்கள்.



சினிமா