ஜல்லி ஊழல்: 2 ரெயில்வே அதிகாரிகளுக்கு சிறை


சென்னை:


ரெயில்வே தண்டவாளத்திற்கு  ஜால்லிக் கற்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக ரெயில்வே துறை உயர் அதிகாரிகள் 2 பேருக்கு ஒரு ஆண்டு சிறை, 20 ஆயிரம் அபராதம் விதித்து சி.பி.ஐ. நீதிமன்றம் உத்தரவிட்டது.

2002 ஆம் ஆண்டு அரக்கோணம் ரெயில்வே பாதையில் அமைக்கப்பட்ட தண்டவாளத்தில் ஜல்லி போடுவதற்காக வேலூரைச் சேர்ந்த மணி நாயுடுக்கு ரூ. 1கோடியே 86 லட்சத்திற்கு கான்டிராக்ட் விடப்பட்டது.

இந்நிலையில் ஜல்லிக் கற்கள் தரமற்றதாக இருப்பதாகவும், தண்டவாளம் பாதிக்கும் நிலை உருவாகும் என்றும் புகார் எழுந்தது.  புகாரின் அடிப்படையில் ரெயில்வே அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தரமாற்ற ஜல்லி சப்ளை செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. 

இதையடுத்து இது குறித்து சி.பி.ஐ.விசாரணைக்கு ரெயில்வே உத்தரவிட்டது. சி.பி.ஐ. போலீசார் விசாரணை நடத்தி கான்டிராக்டர் மணி நாயுடுக்கு உடந்தையாக இருந்த ரெயில்வே அதிகாரி அரக்கோணம் ரெயில்வே கோட்டப் பொறியாளர் சுந்தர் மற்றும் முதுநிலை பொறியாளர் வெங்கடேசன் ஆகியோரை கைது செய்தனர்.

இந்த வழக்கு இன்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ரெயில்வே அதிகாரி ஊழல் காரணமாக ரெயில்வே துறைக்கு ரூ. 5 லட்சம் 80 ஆயிரம் இழப்பு ஏற்பட்டிருப்பது நிரூபிக்கப்பட்டது. 

இதையடுத்து நீதிபதி ஜெபாலன் வழங்கிய தீர்ப்பில், ``ரெயில்வே துறை அதிகாரிகள் சுந்தர் மற்றும் வெங்கடேசன் ஆகிய இருவருக்கும் ஒரு ஆண்டு சிறைத் தண்டனையும், 20 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. கான்டிராக்டர் மணி நாயுடு விடுதலை செய்யப்படுகிறார்" என்று தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாடு