எதிர்கட்சிகளுக்கு காங்கிரஸ் கண்டனம்

டெல்லி:



நாடாளுமன்ற பணிகள் முடக்கப்பட்டுள்ளதற்கு எதிர்கட்சிகளே காரணம் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

விலைவாசி உயர்வு தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவந்து, வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கம்யூனிஸ்ட் கட்சிகள், தெலுங்கு தேசம், ராஷ்டிரிய ஜனதா தளம், லோக் தளம், அ.தி.மு.க.,  ஆகிய கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டும் வருகின்றன. இதனால் தொடர்ந்து 3 நாட்கள் நாடாளுமன்ற இரு அவைகளின் பணிகள் முடங்கியது.

இதற்கு எதிர்க்கட்சிகளே காரணம் என்று காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மணீஷ் திவாரி இது கூறித்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் மேலும் கூறியது, ``விலைவாசி உயர்வு தொடர்பான ஒத்திவைப்பு தீர்மானத்துக்கு அனுமதியில்லை என மக்களவைத் தலைவர் மீராகுமார் தெரிவித்துவிட்ட நிலையில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் அனுமதிக்கும் என எதி்ர்பார்த்தது.

எனினும் எதிர்க்கட்சிகளின் ஆர்ப்பாட்டம் காரணமாக இன்றும் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. எதிர்க்கட்சிகள் அவையை நடத்தவிடாமல் செய்வது துரதிஷ்டவசமானது. அவை நடவடிக்கைகளை சீர்குலைப்பதால் தீர்வு ஏதும் ஏற்படப்போவதில்லை" என்று மணீஷ் திவாரி தெரிவித்தார்.
இந்தியா