கொலை வழக்கு: பூவரசி ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை:



4 வயது சிறுவனை கொடூரமாக கொலை செய்து சூட்கேசில் அடைத்து வீசிய பட்டதாரிப் பெண் பூவரசியின் ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

காப்பீட்டு நிறுவனத்தில் பணியாற்றும் அதிகாரி ஜெயக்குமார் மகன் ஆதித்யா கொல்லப்பட்ட வழக்கில் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் எழும்பூர் பெண்கள் விடுதியில் தங்கியிருந்த பூவரசி கைது செய்யப்பட்டார். 

அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் ஜெயக்குமார் மீது இருந்த முன்விரோதம் காரணமாக அவர் மகனை கொலை செய்து சூட்கேசில் அடைத்து நாகப்பட்டினம் பஸ்சில் வீசிவிட்டு தப்பியது தெரியவந்தது.

பூவரசியை கைது செய்த போலீசார் அவரை புழல் பெண்கள் சிறையில் அடைத்தனர்.   இந்நிலையில் பூவரசி தனக்கு ஜாமீன் வழக்கக்கோரி வழக்குரைஞர் மூலம் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்தமனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவதாஸ் அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.  இந்நிலையில் இன்று இந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அரசு சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஷாஜகான், ``முன்விரோதம் காரணமாக பூவரசி ஜெயக்குமாரை பழிவாங்க அவர் மகன் ஆதித்யாவை கொலை செய்துள்ளதற்கு தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன.

இந்த வழக்கு விசாரணை தொடக்கக் கட்டத்தில் உள்ளதால் பூவரசிக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. அப்படி வழங்கினால் அது விசாரணையை பாதிக்கும்" என்று வாதிட்டார்.  ஜெயக்குமார் சார்பில் ஆஜரான வழக்குரைஞரும் இதே கருத்தை வலியுறுத்தினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி தேவதாஸ், ``குழந்தை ஆதித்யாவை பூவரசி தான் கொலை செய்தார் என்று வாக்கு மூலங்களும், கொலை நடந்த இடத்தில் தங்கியிருந்தவர்களின் சாட்சிகளும் உள்ளன. அடிப்படை ஆதாரங்கள் வலுவாக உள்ளதால் பூவரசிக்கு ஜாமீன் தர இந்த நீதிமன்றம் விரும்பவில்லை. எனவே அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என்று உத்தரவிட்டார்.
தமிழ்நாடு