கோவையில் தி.மு.க. பொதுக்கூட்டம்: கருணாநிதி பேசுகிறார்

கோவை:


கஸ்ட்- 2 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றவுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசைக் கண்டித்து கோவை வ.ஊ.சி. மைதானத்தில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சி பொதுச்செயலாளர் ஜெயலலிதா பங்கேற்று உரையாற்றினார். 

ஜெயலலிதாவின் பேச்சைக் கேட்க திரண்ட பிரமாண்டக் கூட்டம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் வரும் ஆகஸ்ட்-2 ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்தில் தி.மு.க. தலைவர், முதல்வர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அ.தி.மு.க. கூட்டத்திற்கு திரண்டது போன்ற பிரமாண்டக் கூட்டத்தைத் திரட்டிக்காட்ட கோவை தி.மு.க. வினர் ஆயத்தமாகி வருகின்றனர்.

அ.தி.மு.க. வினர் திரட்டிக்காட்டிய கூட்டத்திற்கு இணையாக தங்கள் சக்தியை காட்ட தி.மு.க. வினர் திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் கோவையில் திடீர் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.  

கோவை வரும் முதல்வர் கருணாநிதி டைடல் பூங்கா திறப்பு விழாவிலும் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.  முதல்வர் வருவதற்கு முன்பே துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட்-1ஆம் தேதி கோவை வரத் திட்டமிட்டுள்ளார். கோவையில் நடைபெறவுள்ள தொழில் முனைவோர் மாநாட்டை தொடங்கிவைக்கும் அவர் பின்னர் பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ. 5 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நானோ மையத்தையும் திறந்து வைக்கிறார்.

மேலும் பல்கலைக்கழக வளாகத்தில் ரூ. 16 கோடியில் புதிய கட்டங்கள் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டவுள்ளார். முதல்வர், துணை முதல்வர் வருகையையொட்டியும், முதல்வர் பங்கேற்கவுள்ள பொதுக்கூட்டத்திற்கான முன் ஏற்பாடுகள் குறித்தும் மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் கோவை மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் ஆலோசனை நடத்திவருகின்றனர்.

தமிழ்நாடு