3 வது நாளாக பாராளுமன்றம் முடங்கியது



டெல்லி:



விலைவாசி உயர்வு குறித்து ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்து விவாதம் நடத்தக்கோரி பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் ஆமளியில் ஈடுபட்டதால் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
 
பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் கூட்டத்தில் மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் மாநிலங்களவைக்கு புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். அதோடு அவை ஒத்திவைக்கப்பட்டது.

இரண்டாவது மற்றும் மூன்றாவது நாள் கூட்டத்தில்  விலைவாசி உயர்வைக் கண்டித்து எதிர்க்கட்சிகள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் அவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இரு அவைகளும் இன்று கூடியது.  மக்களவை கூடியதும் பா.ஜ.க., இடது சாரி கட்சிகள், ராஷ்டிரிய ஜனதா தளம், லோக்தளம்  உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வுத் தொடர்பாக பிரச்சனை எழுப்பினர்.  விலைவாசி உயர்வு பிரச்சனையை வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் நடத்த ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தினர். இதற்கு அவைத் தலைவர் ஒப்புதல் அளிக்கவில்லை.

இதையடுத்து அவையின் மையப்பகுதிக்கு வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.  அவைத் தலைவர் அமைதிக்காக்கக் கேட்டுகொண்ட பின்பும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவையை மதியம் 12 மணிவரை ஒத்திவைத்தார்.

இதே போல் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்களவையும் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. இரு அவைகளும் மதியம் 12 மணிக்கு கூடியதும்.  எதிர்க்கட்சிகள் அவையின் மையப்பகுதிகு வந்து மீண்டும் அமளியில் ஈடுபட்டனர்.  இதனால் இரு அவைகளையும் நாளை வரை ஒத்திவைத்து அவைத் தலைவர்கள் உத்தரவிட்டனர்.  இதனால் தொடர்ந்து மூன்றாவது நாளாக பாராளுமன்றம் முடங்கியது.
இந்தியா