நளினி உள்ளிட்ட 4 பேரை விடுவிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி:


ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்றவர்களை விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. 19 ஆண்டுகளுக்கு முன்பு ராஜீவ் கொலைத் தொடர்பான வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்குத் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

4 பேரும் தங்கள் தண்டனையைக் குறைக்கக்கோரி கருணை மனு தாக்கல் செய்தனர். இதில் நளினிக்கு மட்டும் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.  மற்ற 3 பேரின் கருணை மனுக்கள் மீதான முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. நளினி உள்ளிட்ட 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் 4 பேரையும் விடுதலை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கருப்பன் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ``ராஜீவ்காந்தி கொலையின் சதி அம்சங்கள் குறித்து ஆராய அமைக்கப்பட்ட ஜெயின் கமிஷன் தனது இறுதி அறிக்கையை 1998-ம் ஆண்டு மார்ச் 7-ந் தேதி சமர்ப்பித்தது. அதில், ராஜீவ் கொலையில் சந்திராசாமியின் பங்கு, சி.ஐ.ஏ., மொசாத் போன்ற வெளிநாட்டு உளவு அமைப்புகளின் தொடர்பு ஆகியவை குறித்தும், சந்தேகத்துக்குரிய மேலும் 21 பேரின் தொடர்பு குறித்தும் மேற்கொண்டு விசாரணை நடத்துமாறு ஜெயின் கமிஷன் சிபாரிசு செய்திருந்தது.
 
அதன் அடிப்படையில், 1998-ம் ஆண்டு டிசம்பர் 2-ந் தேதி, சி.பி.ஐ.யின் கீழ், பல்நோக்கு கண்காணிப்பு ஆணையம் அமைக்கப்பட்டது. அது, ஜெயின் கமிஷன் குற்றச்சாட்டுகளை விசாரிக்கத் தொடங்கியது.
 
ஆணையம் விசாரணையைத் தொடங்கிய தகவலை விசாரணை கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்திருக்க வேண்டும். குற்றம் சாட்டப்பட்டோரின் அப்பீல் மனுக்களை விசாரித்து வந்த சுப்ரீம் கோர்ட்டிலும் தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் அந்த தகவல்களை கோர்ட்டுக்கு தெரிவிக்காமல் சி.பி.ஐ. மறைத்ததால்  நளினி, முருகன் உள்ளிட்ட 4 பேரும் தண்டிக்கப்பட்டனர்.
 
சந்திராசாமி மற்றும் 21 பேரின் தொடர்பு பற்றி விசாரிக்கப்படவில்லை. எனவே, குறைபாடுள்ள விசாரணையின் அடிப்படையில் தண்டிக்கப்பட்ட நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும்" என்று வழக்குரைஞர் கருப்பன் தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரணை செய்த  நீதிபதிகள் வி.எஸ்.சிர்புர்கர், முகுந்தன் சர்மா ஆகியோர், ``மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது.  சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில் குறுக்கிட விரும்பவில்லை. நளினி உள்ளிட்ட 4 பேரையும் விடுதலை செய்ய முடியாது. இந்த மனுவை மனுதாரர் வாபஸ் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுகிறார்" என்று அறிவித்தனர்.
தமிழ்நாடு