வரி கணக்கு தாக்கல் செய்ய 60 சிறப்பு கவுன்டர்கள்


சென்னை:


ருமான வரிக்கணக்கு தாக்கல் செய்ய வசதியாக சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகத்தில் 60 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.  ஜூலை-31 ஆம் தேதி வரை இந்த சிறப்பு கவுன்டர்கள் செயல்படும். 

இது குறித்து வருமான வரித்துறை  ஆணையர் பாட்டியா. வருமான வரித்துறை முதன்மை ஆணையர் பிரேமாமாலினி வாசன்  ஆகியோர் கூறியது, ``வருமான வரி தாக்கல் செய்வது அவசியம். சம்பளதாரர்கள் வரும் 31-ம் தேதிக்குள் தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும். இணையதளம் வழியாகவும் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்யலாம்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி தலைமை அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூலை 28) முதல் ஜூலை 31 வரை 4 நாள்கள் சிறப்பு கவுன்ட்டர்கள் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கூட்டத்தைக் கட்டுப்படுத்துவதற்காக 40 சிறப்பு கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. காஞ்சிபுரம், தாம்பரம் பகுதியைச் சேர்ந்தவர்களுக்காகவும் சிறப்புக் கவுன்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. காலை 9.45 முதல் மாலை 5.30 மணி வரை வருமான வரி கணக்குப் படிவங்களைத் தாக்கல் செய்யலாம். வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் அதற்கான படிவத்தை பூர்த்தி செய்வதற்காகவும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

படிவத்தை பூர்த்தி செய்வதற்கு வருமான வரி அலுவலக ஊழியர் அல்லாதவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. அவர்களிடம் சிறியத் தொகையைச் செலுத்தி பூர்த்தி செய்து கொள்ளலாம்.  சிறப்பு கவுன்ட்டர்கள் மூலம் கடந்த ஆண்டு (2009 ஜூலை) தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 4 லட்சத்து 87 ஆயிரத்து 262 பேர் தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தனர். இதில் சென்னையில் மட்டும் 2 லட்சத்து 51 ஆயிரத்து 262 பேர் தாக்கல் செய்தனர்.

இதே போல் தென்னக ரயில்வே, விமான நிலையம் மற்றும் ஐ.சி.எப். ஆகிய இடங்களில் நேரடியாக சென்று நடத்திய சிறப்பு முகாமில் 18 ஆயிரம் பேர் தங்களது வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்தனர்.   இந்த ஆண்டு தென்னக ரயில்வே, விமான நிலையம், ஐ.சி.எப்., சென்னை துறைமுக பொறுப்புக் கழகம், அசோக் லேலாண்ட், டைடல் பார்க் உள்ளிட்ட 8 இடங்களில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 40 ஆயிரம் பேர் வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.
தமிழ்நாடு