தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்க இலங்கையை வலியுறுத்த வேண்டும்: டி.ராஜா
டெல்லி:
 
லங்கைத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க அந்நாட்டு அரசை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.  
 
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளரான டி.ராஜா டெல்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவை திங்கள்கிழமை சந்தித்துப் பேசினார். அப்போது இந்தக் கோரிக்கையை அவர் விடுத்தார்.
 
இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் ராஜா கூறியது, ``இலங்கைத் தமிழர் பிரச்னையைத் தீர்ப்பதில் இந்தியாவுக்கு முக்கிய பங்கு உண்டு.  தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண இலங்கை அதிபர் ராஜபட்சேவுடன் இந்திய அரசு பேச்சு நடத்த வேண்டும். தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க இலங்கை அதிபரை இந்திய அரசு வலியுறுத்த வேண்டும்.
 
தமிழர்களின் நலன் கருதி இந்த நடவடிக்கையை மத்திய அரசு விரைந்து எடுக்க வேண்டும்.  குறிப்பிட்ட கால நிர்ணயம் செய்து இலங்கைத் தமிழர்கள் பிரச்னைக்குத் தீர்வு காண வேண்டும். இந்தியாவில் ஆயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் அகதிகள் முகாமில் வசிக்கிறார்கள்.  எனவே இது இந்தியாவுக்கு முக்கியமானப் பிரச்னையாகும்.
 
இப்பிரச்னைக்கு விரைந்து தீர்வு காணக் கோரி ஜூலை 8-ம் தேதியை அகில இந்திய அளவில் இலங்கைத் தமிழர் கருத்தொற்றுமை நாளாக இந்திய கம்யூனிஸ்ட் கடைப்பிடிக்க உள்ளது.  இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்படி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழு பிரதமர் மன்மோகன் சிங்கை விரைவில் சந்தித்து வலியுறுத்தும்.
 
இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரில் இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக போர்க் குற்றம் புரிந்துள்ளது என்பதை ஐக்கிய நாடுகள் சபை அமைத்த குழு அளித்த அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது`` என்றார் அவர்.
இலங்கை