ஐ.நா.வை எதிர்க்க தமிழர்களை கட்டாயப்படுத்தும் இலங்கை: பழ.நெடுமாறன் கண்டனம்

சென்னை:

லங்கையில் நடந்த போர்க்குற்றம் குறித்த ஐ.நா.சபை நிபுணர் குழு அறிக்கைக்கு எதிராக போராட்டம் நடத்த தமிழர்களை கட்டாயப்படுத்தும் இலங்கை அரசுக்கு பழ.நெடுமாறன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ` ராஜபக்சேயின் போர்க் குற்றங்கள் குறித்த ஐ.நா. விசாரணைக் குழுவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் கொழும்பில் மே தினத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வேண்டுமென தமிழர்கள் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

சிங்களச் சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களும் சிறையில் இருப்பவர்களின் குடும்பத்தினரும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளத் தவறினால் மீண்டும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என ராணுவத்தினால் மிரட்டப்பட்டுள்ளனர். இதன் விளைவாக கிளிநொச்சிப் பகுதியிலிருந்து 20க்கு மேற்பட்ட பேருந்துகளில் தமிழர்கள் கொழும்புக்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ள தகவல்கள் கிடைத்துள்ளன.

அதைப் போல யாழ்ப்பாணத்தில் உள்ள ஐ.நா. மற்றும் தொண்டு நிறுவனங்களின் அலுவலகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு கொழும்புவில் இருந்து சிங்களர்கள் அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ராஜபக்சேயின் இந்த முயற்சிகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சிறைகளிலிருந்து விடுவிக்கப்பட்டப் பிறகும் தமிழர்கள் இன்னமும் கொத்தடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பது அம்பலமாகியுள்ளது. இந்தக் கொடிய சூழ்நிலையில் இருந்து தமிழ் மக்களை காப்பாற்றுவதற்கு ஐ.நா. சபை விரைந்து செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்` என்று பழ.நெடுமாறன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இலங்கை