ஐ.நா.விசாரணைக்குழு: இந்திய அரசின் மவுனத்தால் இலங்கை அதிர்ச்சி

 
கொழும்பு:
 
 
 
லங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா.சபை குழு அமைத்துள்ளதற்கு இந்திய அரசு எதிர்ப்பு தெரிவிக்காததால் இலங்கை அதிர்ச்சியடைந்துள்ளது.
 
இலங்கையில் கடந்த ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஒடுக்குவதாகக்கூறி இலங்கை அரசு நடத்திய தாக்குதலில் லட்சக்கணக்கில் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.   3 லட்சத்துக்கும் அதிகமானோர் அகதிகளாக்கப்பட்டு முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டனர். 
 
இந்நிலையில் இலங்கை அப்பட்டமாக மனித உரிமை மீறலும், போர்க்குற்றமும் நடந்துள்ளது எனவே இலங்கை மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஐ.நா. நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  சர்வதேச மனித உரிமை அமைப்புகளும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வலியுறுத்தின.
 
இதை ஏற்று இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்த ஐ.நா.சபை இந்தோனேசிய நாட்டின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் 3 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது. இதற்கு இலங்கை அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துவருகிறது.
 
மாறாக ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கை மீதான ஐ.நா.வின் விசாரணைக்குழுவிற்கு  முழு ஆதரவை அளித்துள்ளது. இந்நிலையில் இந்திய அரசு ஐ.நா.வின் இந்த விசாரணை குழுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று இலங்கை எதிர்பார்த்தது. ஆனால்  இதுவரை இந்திய அரசு ஐ.நா.வின் விசாரணை குழுவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் இலங்கை அரசு பெரும் அதிர்ச்சியடைந்துள்ளது. 
 
ஐ.நா.சபையில் இலங்கைக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த இந்திய அரசு போர்க்குற்றம், மனித உரிமை மீறல் குறித்து இலங்கையில் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ள ஐ.நா.வின் குழுவிற்கு எதிர்ப்பு தெரிவித்து தடுத்து நிறுத்த வேண்டும் என்று வெளியுறவுத்துறை அதிகாரிகள் மூலம் இலங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கை