போர்க்குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்: கருணாநிதி
சென்னை:
 
``லங்கை போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்`` என்று  தி.மு.க. தலைவர் முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

தி.மு.க. உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் மேலும் கூறியது, `
`இலங்கை போர் குற்றங்களுக்காக ஐ.நா. அமைப்பு நடத்திய விசாரணையில் இலங்கை கடற்படையினர் ஈழத்தமிழர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியது உறுதி செய்யப்பட்டுள்ளது.
 
மனித உரிமை மீறல்கள் நடைபெற்று இருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பதாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. இறுதி கட்டப்போரில் 40 ஆயிரம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நடந்த போர்க்குற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதை திமுக வலியுறுத்துகிறது. தமிழர்கள், சிங்களர்கள் இடையே சமத்துவ நிலை ஏற்பட வழி வகுக்கப்பட வேண்டும்.

போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. குழு பரிந்துரைத்தவாறு சர்வதேச விசாரணை ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும். போர் குற்றங்களுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து முயற்சிகளிலும் ஈடுபட வேண்டும் என்று மத்திய அரசை தி.மு.க. உயர்நிலை செயல்திட்ட குழு வலியுறுத்துகிறது.

இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து கூட்டணி கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது`` முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
இலங்கை