இலங்கைக்கு ஐ.நா.சபை கடும் எச்சரிக்கை
கொழும்பு:
 
லங்கையின் போர்க்குற்றம் தொடர்பான ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையை எதிர்த்து அதிபர் ராஜபக்சே பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளதற்கு ஐ.நா. சபை எச்சரிக்கை தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இது குறித்து ஐ.நா.வின் துணை செய்தித் தொடர்பாளர் பர்ஹான் ஹக், "ஐ.நா.வுக்கு எதிரான ராஜபட்சேவின் சவாலை நாங்கள் சாதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை" என்று கூறியுள்ளதாக இலங்கைத் தமிழ் இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
 
"கொழும்புவில் பணியாற்றும் ஐ.நா. கிளை அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது இலங்கை அரசின் பொறுப்பு" என்றும் பர்ஹான் ஹக் கூறியிருப்பதாக அந்த இணையதளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், "ஐ.நா.உறுப்பு நாடு என்ற அடிப்படையில் இலங்கையிடம் வழங்கப்பட்ட அறிக்கையின் தகவல்கள் வேண்டுமென்றே கசிய விடப்பட்டுள்ளது கடுமையான விஷயம்" என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
 
இலங்கை ராணுவம் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக ஐ.நா. நிபுணர் குழு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதற்கு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மே தினத்தில் ஐ.நா.வுக்கு எதிராக பேரணி நடத்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், ஐ.நா. சபை இவ்வாறு இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை