புலிகள் மீதான தடையை நீக்கக்கோரி கையெழுத்து இயக்கம்: உயர்நீதிமன்றம் அனுமதி

சென்னை:

விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி கையெழுத்தியக்கம் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கையெழுத்தியக்கம் நடத்த சென்னை மாநகர காவல்துறை விதித்திருந்தத் தடை ஆணையையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் கருத்துரிமை களத்தின் ஒருங்கிணைப்பாளர் புகழேந்தி தங்கராஜ் தாக்கல் செய்திருந்த ரிட் மனுவில், .`இலங்கையில் தமிழீழ தனி நாடு கேட்டு போராடிவந்த விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தடையை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுததிடும் வகையில் பொது மக்களிடம் கடந்த 15-10-2010 ஆம் தேதி சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கையெழுத்தியக்கம்  நடத்த அனுமதியும், பாதுகாப்பும் கேட்டு சென்னை மாநகர போலீசாரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் மத்திய அரசின் தடையைக் காரணம் காட்டி போலீஸ் அனுமதி மறுத்துவிட்டனர்.

இது இந்திய அரசியல் சட்டத்துக்கு எதிரானது. எனவே கையெழுத்தியக்கத்துக்கு அனுமதியும், பாதுகாப்பும் தர போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்` என்று கூறியிருந்தார். 

இந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கே.சந்துரு பிறப்பித்த உத்தரவில், `ஒரு இயக்கம் தடை செய்யப்பட்டதாக இருந்தாலும் அதற்கு ஜனநாயக ரீதியாக ஆதரவு தருவது குற்றமாகாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க வலியுறுத்தி கையெழுத்தியக்கம் நடத்துவதும் அதன் மூலம் பொதுமக்களின் கருத்தை மத்திய அரசுக்கு தெரிவிப்பதும் சட்டவிரோதம் அல்ல. எனவே, கையெழுத்தியக்கம் நடத்த அனுமதி மறுத்த போலீசின் உத்தரவு தள்ளுபடி செய்யப்படுகிறது.

மேலும் மார்ச் 30 ஆம் தேதி கையெழுத்தியக்கம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் அப்போது பாதுகாப்பும் அளிக்க வேண்டும் என்றும் மனுதாரர் கோரியுள்ளார். அதற்கு போலீசார் அனுமதியும், பாதுகாப்பும் அளிக்க வேண்டும்` என்று நீதிபதி சந்துரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இலங்கை