இலங்கை தூதரகம் முன் தி.மு.க. ஆர்ப்பாட்டம்
 
 
சென்னை:
 
நாகப்பட்டினம், காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்த 106 மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் செவ்வாய்க்கிழமை சிறைபிடிக்கப்பட்டதை கண்டித்தும், மீனவர்களை விடுவிக்கக் கோரியும் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தி.மு.க. அறிவித்திருக்கிறது.
 
இது குறித்து தி.மு.க.சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில்...`வங்கக் கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் அவ்வப்போது இலங்கைக் கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். மீன்பிடி வலைகளை அறுப்பது, படகுகளைச் சேதப்படுத்துவது, மீன்களை அள்ளிச் செல்வது, துப்பாக்கிச் சூடு நடத்துவது என இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்கள் தொடர்ந்து வருகின்றன. அண்மையில் கடலில் மீன்பிடிக்கச் சென்ற வேதாரண்யம் மீனவர் ஜெயக்குமாரை இலங்கைக் கடற்படையினர் கயிற்றால் கழுத்தை இறுக்கிக் கொலை செய்தனர். இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
இதனிடையே, அத்துமீறி நடந்துகொள்ளும் இலங்கைக் கடற்படையினர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் கருணாநிதி தந்தி அனுப்பினார். இந்த விஷயத்தில் பிரதமரின் தனிப்பட்ட தலையீடு அவசியம் என்றும் முதல்வர் வலியுறுத்தினார். 
 
இதையடுத்து, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவின்பேரில் வெளியுறவு செயலர் நிருபமா ராவ் இலங்கை சென்று அந்நாட்டு அரசுடன் பேச்சு நடத்தினார்.மீண்டும் அத்துமீறல்: இந்த நிலையில், நாகை துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 18 மீன்பிடிப் படகுகளும், இந்தப் படகுகளிலிருந்த மீனவர்கள் 106 பேரும் இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டதாக செவ்வாய்க்கிழமை தகவல் வெளியானது. சிறைபிடிக்கப்பட்ட நாகை அக்கரைப்பேட்டையைச் சேர்ந்த மீனவர் ஒருவர் தொலைபேசி மூலம் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். 
 
மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் இலங்கை மீனவர்கள் சிறைபிடித்து, இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்ததாகவும், இலங்கைக் கடற்படையே நேரடியாக தமிழக மீனவர்களைச் சிறைபிடித்துச் சென்றதாகவும் மாறுபட்ட தகவல்கள் கூறப்படுகின்றன.இலங்கைத் தூதரகம், துறைமுகங்கள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம்: இலங்கைக் கடற்படையின் இந்தச் செயலைக் கண்டித்தும், சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரியும் சென்னையிலுள்ள இலங்கைத் தூதரகம் முன்பு புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்`  என்று தி.மு.க. தலைமைக் கழகம்  வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







 
  
இலங்கை