ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்த வேண்டும்: சீமான்


சென்னை:
 
 
லங்கை அதிபர் ராஜபக்சேவை குற்றவாளி கூண்டில் நிறுத்தவேண்டும் என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் தெரிவித்தார். 
 
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...`உலகின் எந்த நாட்டிலும் நடமாட முடியாதபடி இலங்கை அதிபர் ராஜபக்சேவை விரட்டி அடிக்கும் புலம்பெயர் தமிழ்ச் சொந்தங்களுக்கு நாம் தமிழர் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது.
 
பல நாடுகளிடமிருந்தும் ஆயுதம் வாங்கி, ஒரு லட்சம் பேரைக் கொன்று குவித்தவர் ராஜபக்சே  இன்று அவரால் எந்த நாட்டுக்கும் போகமுடியாத நிலை. லண்டனிலிருந்து அமெரிக்கா வரை, ராஜபட்சவை ஒரு விரும்பத்தகாத விருந்தாளியாகக் கருதும் அளவுக்கு ஒன்றரை ஆண்டுகளில் நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.
 
அந்த அளவுக்கு வலுவான போராட்டங்களை நடத்தி வரலாறு படைத்திருக்கும் புலம்பெயர் சொந்தங்கள் ஒவ்வொருவரையும் வரலாறு வாழ்த்தும்.லண்டனில், கொட்டுகிற பனியில் நனைந்தபடி ராஜபக்சேவை விரட்ட ஆயிரக்கணக்கில் திரண்ட இளைஞர்கள், உலகெங்குமுள்ள தமிழ்ச் சொந்தங்களுக்கு தெளிவான பாதையைக் காட்டியிருக்கிறார்கள்.
 
ஒன்று சேர்ந்து உறுதியுடன் நின்றால் எதையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்ததோடு,     `ராஜபக்சே ஒரு நாட்டின் அதிபரல்ல, ஓர் இனத்தைப் படுகொலை செய்த கொலைவெறியன்`     என்பதை சர்வதேச அளவில் நிலைநிறுத்தியும் உள்ளார்கள்.ராஜபட்சேவை மட்டுமில்லாமல் இனப் படுகொலைக்குக் காரணமான ஒவ்வொருவரையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் கடமை நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது.
 
அந்தக் கடமையை நிறைவேற்றாவிட்டால் வாகரையிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை விரட்டி விரட்டிக் கொல்லப்பட்ட நமது சொந்தங்களுக்கு நியாயம் கிடைக்காது `  என்று தனது அறிக்கையில் சீமான்  தெரிவித்துள்ளார்.
இலங்கை