தமிழகத்திலிருந்து இலங்கைக்கு மின்சாரம்: இந்திய கம்யூ.கடும் எதிர்ப்பு


சென்னை:
 
ராமேஸ்வரத்தில் இருந்து கேபிள்கள் மூலம் இலங்கைக்கு மின்சாரம் கொண்டுச் செல்லப்படுவதாக சட்டப் பேரவை இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் வை. சிவபுண்ணியம் குற்றம்சாட்டினார்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை நடைபெற்ற ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் அவர் பேசியது: கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. கான்கிரீட் வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.75 ஆயிரத்தில் வீடு கட்ட முடிவில்லை. இதனால் பணிகள் முடங்கியுள்ளன. எனவே, இந்தத் தொகையை அதிகரிக்க வேண்டும்.

ராமேஸ்வரத்தில் இருந்து இலங்கைக்கு கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கைக்கு மின்சாரம் வழங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது? மீதமுள்ளவர்களையும் கொல்வதற்கு மின்சாரம் தருகிறீர்களா?

இலங்கையில் தமிழர்கள் முள்வேலி முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதும், அரசியல் தீர்வுக்கு ஆரம்ப கட்ட முயற்சிகள்கூட மேற்கொள்ளப்பபடாமல் இருப்பதும் கவலையளிப்பதாகவும், இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் கட்சிக்கு "செக்` வைக்கப்பட்டுள்ளது.

எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் இருக்கும்போது காமன்வெல்த் விளையாட்டு போட்டி நிறைவு விழாவுக்கு இலங்கை அதிபர் ராஜபட்சவை ஏன் அழைத்தீர்கள்? மனித உரிமையை மீறி காங்கிரஸ் செயல்படுகிறது`` என்றார் வை. சிவபுண்ணியம்.
இலங்கை