தமிழகத்திலிருந்து வெளியேறினர் இலங்கை ராணுவ அதிகாரிகள்
குன்னூர்:
 
முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் கடும் எதிர்ப்பு காரணமாக, குன்னூரில் இருந்து இலங்கை ராணுவ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை வெளியேறினர்.

ஆஸ்திரேலியா, சீனா, நைஜீரியா உள்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 25 ராணுவ அதிகாரிகள், நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள வெலிங்டன் பயிற்சி மையத்துக்கு வந்துள்ளனர். இதில் இலங்கையைச் சேர்ந்த 2 ராணுவ அதிகாரிகளும் அடங்குவர். இந்நிலையில் இலங்கை ராணுவ அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதற்கு தமிழகம் முழுவதும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது.

 முதல்வர் ஜெயலலிதாவும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். ராணுவ அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டுமென்றும், அவர்களுக்கு இந்தியாவின் எந்தப் பகுதியிலும் பயிற்சி அளிக்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியிருந்தார். இந்தப் பிரச்னை குறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதமும் அனுப்பினார். இதே பிரச்னை தொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர், புதிய தமிழகம் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தினர்.

இந்த நிலையில், பயிற்சிக்காக வந்திருந்த இலங்கை விமானப்படை அதிகாரி ஏர்வைஸ் மார்ஷல் ஜெகத் ஜூலங்கா டயஸ், கடற்படை அதிகாரி எஸ்.ரணசிங்கே ஆகியோர் குன்னூரில் இருந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணியளவில் வாகனங்கள் மூலமாக கோவைக்குப் புறப்பட்டுச் சென்றனர்.

சென்னை அருகே தாம்பரம் விமானப்படை தளத்தில் இலங்கையைச் சேர்ந்த வீரர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட இருந்தது. இதற்கு முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து, இலங்கை விமானப்படை வீரர்கள் தமிழகத்தில் இருந்து வெளியேறியது நினைவு கூறத்தக்கது. 
இலங்கை