கருணாநிதியின் 'டெசோ'வின் புதிய உறுப்பினர் திருமாவளவன்
சென்னை:
 
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. டெசோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்க்கப்பட்டுள்ளார்.
 
இது குறித்து டெசோ அமைப்பு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இலங்கைத் தமிழர் பிரச்னைக்குத் தீர்வு காண்பதற்காக `தமிழ் ஈழம் ஆதரவாளர் அமைப்பு` எனும் அமைப்பு மீண்டும் திமுக தலைவர் கருணாநிதியால் கட்டமைக்கப்பட்டு ஈழத் தமிழரின் நலனுக்காக ஓய்வு ஒழிச்சலின்றிப் பணியாற்றி வருவதறிவோம். இவ்வமைப்பின் முதல் கலந்துரையாடல் கூட்டம் 30-4-2012 அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் `டெசோ` அமைப்புக்குத் தலைவராக திமுக தலைவர் கருணாநிதி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வமைப்பில் க.அன்பழகன் உள்ளிட்ட உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். அவ்வமைப்பில், தற்போது மேலும் ஒரு உறுப்பினராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி.யை திமுக தலைவர் கருணாநிதி நியமித்துள்ளார்.

அந்த அறிவிப்பின்படி, `டெசோ` அமைப்பின் நிர்வாகிகள் விவரம் வருமாறு: தலைவர் - தி.மு.க. தலைவர் கருணாநிதி. உறுப்பினர்கள் - க.அன்பழகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப.வீரபாண்டியன், சுப்புலட்சுமி ஜெகதீசன்.

மேலும், விழுப்புரத்தில் 5-8-2012 அன்று திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெறவுள்ள `டெசோ` மாநாட்டுக்கு வரவேற்புகுழு அமைக்கப்பட்டுள்ளது. அதில், வரவேற்புக்குழு தலைவராக மு.க.ஸ்டாலின் செயல்படுவார். செயலாளர்களாக க.பொன்முடி, கவிஞர் கலி.பூங்குன்றன், ரவிக்குமார், வக்கீல் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், வக்கீல் அசன் முகம்மது ஜின்னா செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை