தமிழறிஞர்கள் கொழும்பு செல்ல வேண்டாம்: வைகோ வேண்டுகோள்
சென்னை:
 
லங்கைத் தலைநகர் கொழும்பில் நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள பாரதி விழாவில் பங்கேற்க வேண்டாம் என தமிழறிஞர்களுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
 
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:கொழும்பு தமிழ்ச் சங்கமும், சென்னை பாரதி சங்கமும் இணைந்து ஜூன் 1-ம் தேதி கொழும்பில் "தேமதுரத் தமிழோசை உலகெலாம் பரவச் செய்வோம்` என்ற தலைப்பில் பாரதி விழா நடத்த இருப்பதாகவும், அதில் தமிழகத்தில் இருந்து பேராசிரியர்களும், சொற்பொழிவாளர்களும் கலந்து கொள்ள இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.
 
தமிழர் தாயகத்தில் சிங்கள மற்றும் பௌத்தமயமாக்கல் வேகமாக நடந்து வருகிறது. தமிழர்கள் வாழும் இடங்களில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களும், திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழறிஞர்களின் சிலைகளும் உடைக்கப்பட்டு வருகின்றன. ஈழத் தமிழர் படுகொலை குறித்த உண்மைகளை மறைப்பதற்காக இதுபோன்ற விழாக்களை இலங்கை அரசும், இந்திய அரசும் நடத்தி வருகின்றன.
 
ஜூன் 1-ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள உள்ள விழாவில் இந்தியத் தூதரகத்தின் முதன்மைச் செயலர் ஜஸ்டின் மோகன் பங்கேற்க இருப்பதாகத் தெரிகிறது. எனவே, இவ்விழாவில் தமிழகத்தில் இருந்து யாரும் பங்கேற்க வேண்டாம் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை