ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டு வந்தால்தான் சாப்பாடு

`சார்... உங்க தொடரை குங்குமத்தில் படிக்கிறேன்... நீங்க சொன்ன மாதிரி வீட்டு பட்ஜெட்டை மூணுமுறை புரட்டிப் போட்டுப் பார்த்துட்டேன்... கடைசியில் மிஞ்சியது 500 ரூபாய்தான். இந்த 500 ரூபாயை மிச்சம் பிடிச்சு கோட்டையா கட்டமுடியும்? அதை இப்போ செலவழிச்சாலாவது மாசம் முழுக்க சந்தோஷம் கிடைக்கும்... தினம் என் பையனுக்கு பிரியாணி பொட்டலம் வாங்கிக் குடுத்தேன்னா அவனுக்கும் சந்தோஷம் எனக்கும் புள்ளையை குஷிப்படுத்தின பெருமை கிடைக்கும்" என்றார் ஒருநாள் அதிகாலை நடைப் பயிற்சியின்போது சந்தித்த இளநீர் கடைக்காரர்.

``அடடே... உங்களால் மாசம் 500 ரூபாய் மிச்சம் பிடிக்க முடிகிறதா... அந்தப் பணம் என்னுதில்லைனு எடுத்து வெச்சா சிரமமே இல்லாம நீங்க லட்சாதிபதி ஆகிடலாமே..." என்று சொல்லி ஒரு கணக்கை எடுத்துக் கொடுத்தேன். இளநீர்கடை இளைஞர் அசந்து போனார். உங்களுக்கும் அந்த மந்திரக் கணக்கை சொல்லித் தருகிறேன்.

அதற்கு முன் ஒரு விஷயம்... இப்போதெல்லாம் இளைஞர்களுக்கு பணத்தின் மீது மரியாதை இருப்பதில்லை. இன்றைக்கும் ஓட்டலுக்குப் போனால் ஐம்பது ரூபாய், நூறு ரூபாயெல்லாம் டிப்ஸ் கொடுக்கிறார்கள் இளைஞர்கள். எல்லாம் அவர்கள் அப்பா அம்மா சம்பாதித்த பணமாகத்தான் இருக்கும்.

ஊருக்கு வெளியே இருக்கும் குளக்கரை ஓரமாகக் கொல்லுப் பட்டறை வைத்திருந்த ஒருவர் தன் மகனுக்கு வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக் கொடுக்க முடிவு செய்தார். ஒரு ரூபாய் சம்பாதித்து விட்டு வந்தால்தான் சாப்பாடு என்று அவனை வெளியில் துரத்தினார். அவனுக்கோ உழைக்க சோம்பேறித்தனம். வீட்டுப் பின்வாசல் வழியாகச் சென்று அம்மாவிடம் ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தான்.

அவர் அந்தக் காசை இப்படியும் அப்படியும் புரட்டிப் பார்த்துவிட்டு அதை குளத்தில் விட்டெறிந்தார். பிறகு உள்ளே போய்ச் சாப்பிடச் சொன்னார். அவனும் வீட்டுக்குள் போய்விட்டான். அடுத்த நாளும் அதுவே தொடர்ந்தது. அதற்கடுத்த நாளும் அப்பா காசு கேட்பதும் பின்வாசல் வழியாக அம்மாவிடம் காசு வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பதும் வழக்கம் போல நடந்தது.

ஒரு வாரத்துக்குப் பிறகு ஒருநாள், அம்மா முக்கியமான வேலையாக வெளியூருக்குச் சென்றுவிட... மகனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அப்பா எங்கே காசு என்றார். மகன் வேறுவழியில்லாமல் ஊருக்குள் வேலைதேடிச் சென்றான். ஒரு மளிகைக் கடையில் வண்டியில் வந்த மூட்டைகளை இறக்கி கடைக்குள் வைத்தால் ஒரு ரூபாய் தருவதாகச் சொன்னார். மகனும் அந்த மூட்டைகளை இறக்கி வைத்துவிட்டு ஒரு ரூபாயை வாங்கிக் கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்தான்.

வழக்கம்போல இப்படியும் அப்படியும் நாணயத்தைப் புரட்டிப் பார்த்துவிட்டு குளத்துக்குள் வீசப் போனார். பதற்றமாகிப் போன மகன் அப்பாவின் கையை எட்டிப் பிடித்துவிட்டான். `அப்பா... நான் உழைத்துக் கொண்டு வந்த பணத்தை குளத்துக்குள் வீசுகிறாயே..." என்றான் கோபமாக. அப்பா அதன்பிறகு மகனிடம் காசு கேட்கவில்லை. மகனும் ஒருநாள்கூட சும்மா வீட்டில் இருக்கவில்லை.

இப்போது மகன்களே பணத்தை வீசி எறிகிறார்கள்... டிப்ஸ் என்ற பெயரிலும் வீண் செலவு என்பதாகவும்! அவர்கள் உழைப்பதில்லை என்பதால் அதன் அருமையை அவர்கள் உணர்வதில்லை. இதில் பெற்றோரின் பங்கும் முக்கியமாக இருக்கிறது. நான் அனுபவிக்காததை என் பிள்ளைகள் அனுபவிக்க வேண்டும் என்று அளவுக்கு மீறி செல்லம் கொடுக்கிறார்கள்.

எதை எதையோ மேலைநாடுகளைப் பார்த்து கற்றுக் கொள்கிறோம். ஆனால், படிக்கும்போதே உழைப்பது, பகுதி நேரமாக வேலை செய்வது போன்ற பண்புகளை நாம் கற்றுக்கொள்வதில்லை. அதைக் கற்றுக்கொண்டால் பணத்தின் அருமை புரியும். இதை ஏன் இவ்வளவு வலியுறுத்திச் சொல்கிறேன் என்றால் இளமையில் தொடங்கும் சேமிப்பும் முதலீடும் மிகப் பெரிய அளவில் கைகொடுக்கும் என்பதால்தான்.

இப்போது இளநீர் கடைக்காரரிடம் சொன்ன கணக்கைப் பார்க்கலாம். அவரால் மாதம் 500 ரூபாய் சேமிக்க முடியும் என்றால் அதை எந்த யோசனையும் இல்லாமல் வங்கியில் ஒரு சேமிப்புக் கணக்கைத் தொடங்கி அதில் போட்டு வைத்தால் 13 வருடங்கள் கழித்து அது லட்ச ரூபாய்க்குப் பக்கத்தில் சேர்ந்திருக்கும். வங்கி சேமிப்பில் வட்டி விகிதம் 3.5% என்ற கணக்கின் அடிப்படையில் சேரும் தொகை இது.

இளநீர் கடைக்காரர்கிட்டே, `உன் பிள்ளைக்கு இன்னிக்கு கிடைக்கும் பிரியாணி பெருசா... இல்லை, பத்து வருஷம் கழிச்சு அவனைக் காலேஜில் சேர்க்கறதுக்கு லட்ச ரூபாய் உதவியாக இருந்தால் அது பெரிய விஷயமானு கேட்டதும், ஆடிப் போயிட்டார்.

வங்கியில் சேமிக்கறதுங்கறது நல்ல விஷயம்தான். அதுவே இன்னும் கொஞ்சம் தெளிவாகத் திட்டமிட்டு செய்தால் பத்து வருஷம் காத்திருக்கத் தேவையில்லை. இன்னும் சீக்கிரமாகவே லட்ச ரூபாயைப் பார்த்திடலாம்.

ஏனென்றால், சாதாரண சேமிப்புக் கணக்கு என்றால் வட்டி விகிதம் 3.5% அளவுக்குத்தான் கிடைக்கும். அதுவே, அதே வங்கியில் ரெக்கரிங் டெபாசிட் என்ற முறையில் சேமித்தால் 6.5% வட்டி அதிகமாகக் கிடைக்கும். உங்க பணம் ஓடி ஓடி உழைக்கத் தயாராக இருக்கும்போது ஏன் அதை சோம்பேறியாக உட்கார வைக்க நினைக்கிறீங்க?!

அதனால், அந்த இளநீர் கடைக்காரருக்கு அவர் பணத்தை முதலீடு செய்ய வேறு சில வழிகளைச் சொல்லிக் கொடுத்தேன். அதையெல்லாம் உங்களுக்கும் சொல்லித் தர்றேன்...

அதற்கான வழிமுறைகளைப் பற்றி விவரமாக ஆலோசிப்போம்.

பணம் பெருகும்.

பிசினஸ் தெனாலி

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்