“க்ரிட்டிக்ஸுக்காக மட்டும் படம் எடுக்க முடியாது”
கீரிடம், பொய் சொல்லப் போறோம் என்று இரண்டே படங்கள். இரண்டிலும் நடுத்ததர வர்க்கத்தின் கனவுகள், போராட்டங்களை எல்லா தரப்புக்குமான சினிமாவாக எடுத்து, தன்னை தனித்துக் அடையாளம் காட்டியவர். தற்போது பாராட்டுக்கள் குவிந்து வரும் மதராஸப்பட்டினம் படத்தில் தனது பிரத்தியேக முத்திரைகளைப் பதித்திருந்தாலும், முந்தய இரண்டு படங்களில் இருந்து வெளியே வந்து, பீரியட் ஃபீலிம் என்ற வகைமையில் தமிழ் சினிமாவின் சிறந்த முன்மாதிரியை உருவாக்கியிருப்பவர். ப்ரியதர்ஷன் உள்ளிட்ட இயக்குனர்களிடம் உதவியாளராகப் பணி புரிந்த விஜய், தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளர்களில் ஒருவரான ஏ.எல். அழகப்பனின் புதல்வர். தெனாலிக்கான பிரத்தியேக சந்திப்பில் மதராஸப்பட்டினம் சாத்தியமான பின்னனியை மனம் விட்டுப்பேசினார்….  

இயக்குனர் விஜய்ன்னாலே ஆல் க்ளாஸ் ஆடியன்ஸுக்குப் படம் போய் சேரனும்ன்னு நினைகிற ஒரு டைரக்டர். இதை மதராஸப் பட்டனத்துலயும் அப்ளை பண்ணியிருகீங்க இல்லையா?

ஆமா! இதுக்குக் காரணம் அப்பாதான். சினிமா ஜீனியஸ், சினிமா கிரிட்டிக்ஸ் பார்க்கிறதுக்காகவும் பெஸ்டிவலுக்கு அனுப்ப மட்டும் இங்கே படமெடுக்க முடியாது. அப்படியும் எடுக்கனும், ஈரான் இயக்குனர் மஜித் மஜித் மாதிரி ஒரு படமெடுக்கணும், அதுவும் தியேட்டர்ல நல்லா ஒடனும்ன்னு ஆச இருக்கு. ஆனா பணம் சம்பாதிச்ச பிறகு அத என்னோட சொந்தப் பணத்துல எடுக்கணுன்னு நினைக்கிறேன். நாம தயாரிப்பாளர காப்பாத்தினாதான் அவர் மறுபடியும் இன்வெஸ்ட் பண்ண முடியும். எங்க அப்பா அடிக்கடி சொல்லுவார், நல்ல சினிமான்னா அது எல்லாருக்கும் பிடிக்கணும், ஆபாசம் இருக்கக் கூடாதுன்னு. அவர்கிட்டே இருந்து எனக்கு டிரான்ஸ்ஃபர் ஆன விஷயம்தான் இது. மதராஸப்பட்டனம் எனக்கு மட்டுமே பேர் வர்ற மாதிரி ஒரு அவுட் அண்ட் அவுட் கலைப்படமா எடுக்க பொருத்தமான ஸ்கிரிப்டுதான். ஆனால் என்னை நம்பி இன்வெஸ்ட் பண்ற தயாரிப்பாளரை நான் மனசுல வைச்சுக்கணும். அதேநேரம் என்னோட கதைக்கும் நேர்மையா நடந்துகணும். இப்படி படமெடுக்குறதுதான் சரின்னு நினைக்கிறேன்.

மதராஸப்பட்டினம் கதையோட முதல் புள்ளி எங்கே ஆரம்பிச்சது. ஆர்யாவ மனசுல வெச்சுதான் இந்த கதைய உருவாக்குனீங்களா?

இந்தக் கதை என்னோட கல்லூரி நாட்கள்ல எனக்குள்ள விழுந்த ஒரு விதை. என் வரலாற்றுப் பேராசிரியர் ஃப்ரீடம் மூவ்மெண்ட் பத்தி பேசிகிட்டே இருப்பார். அந்த நாட்கள்ல பிறக்காதது நம்மோட துரதிஷ்டம்ன்னு சொல்லுவார். அவர் பேசும்போதெல்லாம் என்னோட மைண்ட் ஸ்கீரின்ல ஒரு பிரியட் ஃபிலிம் ஓட ஆரம்பிக்கும். அந்த வயசுக்கே உரிய உணர்வுகளோட சுதந்திரப் போராட்டம் தீவிரமா இருக்குற காலத்துல ரெண்டு பேர் தங்களோட காதலுக்காகவும் போராடினா எப்படியிருக்கும்ன்னு ஓட்டிப் பார்த்தேன். முதல்ல சுதந்திரப் போராளிகள் காதலிக்கிறதா நினைச்ச மனசு, அப்புறம் ஒரு வெள்ளைகாரப் பொண்ணும் ஒரு சென்னைத் தமிழ்ப் பையனும் லவ் பண்ணா என்ன ஆகும்ன்னு யோசிச்சது. அந்த ரெண்டு கேரக்டரும் என்னை முழுசா ஃப்ரீடம் முவ்மெண்ட படிக்க வெச்சுருச்சு. அதுக்கு அப்புறம் இந்தக் கதை தன்னைதானே எழுதிக்கொண்டதுன்னுதான் சொல்லணும். எழுத்தாளர் பிரபஞ்சன் சார், ப்ரீ இண்டிபெண்டன்ஸ பேக்டிராப்பா வெச்சு ‘வானம் வசப்படும்’ன்னு ஒரு நாவல் எழுதியிருக்கார். அதுக்கு சாகித்திய ஆகடமி கிடைச்சுருக்குன்னு கேள்விப்பட்டு, என்னோட ஸ்கிரிப்ட கிராஸ் செக் பண்ணிக்க அவர் சரியான ஆள்ன்னு முடிவு பன்ணி அவர்கிட்டே கொடுத்து படிக்க சொன்னேன்.

அப்புறம் பொய் சொல்லப் போறோம் படத்துக்குப் பிறகு தெலுங்கு ஹீரோ மகேஷ் பாபுவுக்குக் கதை இருக்காண்ணு கேட்டாங்க. மதராஸப்பட்டினம் கதையை சொன்னேன். பெரிய பட்ஜெட்ன்னு சொல்லி மறுத்துட்டாங்க. அதுக்கு அப்புறம்தான் இந்தப் பந்து ஆர்யா கைக்கு வந்தது. இது டெபனெட்டா ஒரு சிக்ஸர்ன்னு ஜட்ஜ் பண்னார் ஆர்யா!   

ஹீரோ ஒரு சலவைத் தொழிலாளின்னு ஏன் முடிவு பண்ணிங்க?

ஸ்கிரிப்புடுக்காக  ரிசர்ச் பண்ணப்போ, வெள்ளைகாரங்க சமையல் கலைஞர்கள், சலைவைத் தொழிலாளிகள ரொம்ப நம்பியிருந்தாங்க. அதனாலதான் வாஷர்மேன்பெட் என்ற பகுதியே உருவாகியிருக்கு. வெள்ளக்காரங்களுக்குத் துணி துவைச்ச எண்பது, தொண்னூறு வயசு சாட்சிகள் இன்னும் அந்தப் பகுதியில வாழ்ந்துகிட்டு இருக்காங்க.

ஒரு ஒரு மல்யுத்த வீரனனுக்காண சிறப்பான உடல்கட்டு, உடல்மொழி இது இரண்டுலயும் சிறப்பா பண்ணியிருக்க ஆர்யா, பரிதி கேரக்டர இன்னும் நல்லா நடிச்சிருக்கலாம்ண்ணு ஒரு விமர்சனம் இருக்கு கவனிச்சீங்களா?

இதை நான் ஒத்துக்க மாட்டேன். ஆர்யா இயக்குனர்கிட்ட தன்னை முழுமையா ஒப்படைக்கிற நடிகர். செட்ல தீ மாதிரி இருப்பார். இந்தக் காட்சியில பரிதியோட எமோஷன் இதுதான்ன்னு நாம சொல்லிட்டா போதும். அந்தக் காட்சி முடியிற வரைக்கும் பரிதியாவே இருப்பார். நாம் என்ன எக்ஸ்போஸ் பன்றமோ அதுமாதிரி பத்து மடங்கு பவுன்ஸ் பண்ணுவார். பரிதி கேரக்டருக்கு என்ன தேவையோ அத சரியா கொடுத்திருக்கார்ங்கிறது இயக்குனரா என்னோட பார்வை.

ஆமி ஜாக்ஸனுடன் ஒப்பிடும்போது ஆர்யாவின் வெளிப்பாடு குறைவாகத்தானே இருக்கு?

ஆமிக்குன்னு இல்ல, ஃபோதுவாவே ஃபீமேல் ஆக்டர்ஸுக்கு இருக்கக்கூடிய மிகப் பெரிய பலம் கண்கள். அதுல அவங்க ஒரு பத்து பர்செண்ட் நடிப்பைக் காட்டினாலே கேரக்டருக்கு உயிர் வந்துடும். அதுலயும் ஆமி ஜாக்‌ஸனுக்கு வெரி பவர்ஃபுல் ஐஸ். நேருக்கு நேரா ஒரு பத்து வினாடி பார்க்க முடியாத கண்கள். அவங்க கண்களை நான் சிறப்பா பயன்படுத்திக்கிட்டேன்னு சொல்லனும்.  

சுதந்திரப் போராட்டம் என்பது தனிப்பட்ட ஆசாபாசங்களுக்கு இடமில்லாத ஒரு எமோஷனல் ஹிஸ்ட்ரின்னு நம்ம ஆடியண்ஸ் மனசில ஒரு பிம்பம் பதிவாகியிருக்கு. இதை உடைச்சு, சுதந்திரப் போராட்டம் உச்சத்துல இருந்த காலகட்டத்துல, ஒரு காதல சித்தரிக்கும்போது இருக்குற ரிஸ்க் பத்தி ஆரம்பத்துலயே கேள்வி வந்துச்சா?

இந்த பிம்பம்தான் என்னோட ஸ்கிரிப்டுக்கான பலமே. இந்த கான்ராஸ்ட்தான் பரிதியோட காதல் ஒரு கற்பனைங்கிறத மறந்து அப்போ உண்மையா நடந்திருக்கும்ன்னு தியேட்டர்ல ஆடியண்ச நம்ப வைக்குது. ஸ்கிரிப்ட முடிச்சுட்டு நண்பர்கள் கிட்ட டிஸ்கஸ் பண்ணப்போ இதே விவாதம் வந்துச்சு. சுதிரந்திரப் போராட்டம் தீவிரமா இருக்குற காலகட்டத்துல லவ்தான் கதையில முக்கியம்ன்னு காட்டினா ரசிகர்கள் ஏத்துக்குவாங்களான்னு? இந்த ஸ்கிரிப்டோட அடிப்படையே தப்புன்னாங்க. நான் பின்வாங்கல. ஒரு ஆத்மார்த்தமான காதலுக்கு சுதந்திரப் போராட்டமும், மதராஸப்பட்டினமும் கதைக்களம் மட்டும்தான்னு தெளிவா முடிவு பண்ணிகிட்டேன். ஒரு ஸ்கிரிப்ட் ரைட்டரா இதுல காதல் மட்டும்தான் என்னோட போக்கல் பாய்ண்ட்.
 
படத்துல காதல் பேசப்படுற அளவுக்கு கலை இயக்கமும் பேசப்படுது! 65 ஆண்டுகளுக்கு முந்தய மதராஸப்பட்டினத்தை மறு உருவாக்கம் பண்றதுல உங்க டீம் எதிர்கொண்ட சவால்கள் என்ன?

இந்தக் கேள்விக்காக ரொம்ப நன்றி. இந்தப் படத்தோட தயாரிப்பாளர் கல்பாத்தி எஸ். அகோரம் சார், என்னோட ஆர்ட் டைரக்டர் செவ்குமார் இரண்டு பேரைப் பத்தியும் நான் இந்த இடத்துல பேசியே ஆகணும். செல்வகுமார் இயற்கை படத்துலயயே தன்னோட பெக்யூலியாரிட்டிய காட்டினார். அதுக்கு அப்புறம் அவர் வேலை செஞ்ச எல்லா படங்கள்லயுமே கதைக்கு என்ன தேவையோ அதை கொண்டுவராம தூங்கமாட்டார்.

என்னொட செட்ஸ் ரொம்ப்ப ஆத்தெண்டிக்கா இருக்கனும் அதே நேரம் ஹாலிவுட் படங்கள்ல வைக்கிற மாதிரி ஒய்ட் ஷாட்ஸ் வைக்கணும்ன்னு விரும்ம்பினேன். இதுகாக செண்ட்ரல் ஸ்டேஷன் ஏரியா, வாஷர்மேன்பேட்டை, மவுண்ட் ரோடு, டிராம் செட் அப்டீன்னு என்னோட காட்சிகளுக்கான விஷுவலைசேஷனை இந்த பேக்டிராப்ல கொஞ்சம் கண்ட்ரோல்டாதான் யோசிச்சேன். ஆனால் அதைக் கொண்டுவரவே ஒரு பெரிய தயாரிப்பாளராலதான் முடியும். அதுக்கு கதை, திரைக்கதை மேல நம்பிக்கை வைக்கிற ஒரு தயாரிப்பாளராலதான் முடியும். அவர் கதையைப் புரிஞ்சுகிட்டு ஆர்ட் டைரக்‌ஷன்ல நோ காம்ரோமைஸ்ன்னு உற்சாகம் கொடுத்தார். கலை இயக்கத்துக்கு மட்டுமே ஆறு கோடி செலவாச்சு. ஒரு ஆத்மார்த்தமான தயாரிப்பாளர் கிடைச்சதாலதான் பட்ஜெட்டுங்கிற ஒரு பெரிய சேலஞ்ச தாண்ட முடிஞ்சுது.

அப்புறம் 1940களோட மெட்ராஸ ரீகிரியேட் பண்ண ஆராய்சியல இறங்கினப்போ கலர் ரெப்பரெண்ஸ் எதுவும் கிடைக்கல. எல்லாமே பிளாக் அண்ட் ஒயிட் போட்டோக்க்கள். 1942ல என் மனைவின்னு ஒரு கருப்பு வெள்ளை படத்தோட புட்டேஜ் கொஞ்சம் கிடைச்சது. அதுவும் செட்டுக்குள்ள எடுக்கப் பட்ட படம்தான்னாலும் சில விஷயங்கள் உதவியா இருந்தது. விடிஞ்சா சூட்டிங்! டிராமுக்கு என்ன கலர் பெயிண்ட் அடிகிறதுன்னு தெரியல. அப்போ டிராம்ல டிரவல் பண்ண 90 வயசு தாத்தாக்கள் சில பேர பிடிச்சு டிராம் என்ன கலர்ன்னு கேட்டா சரியா சொல்ல முடியல. அப்புரம் நாங்களே க்ரீன், ப்ரவுன் கலர்கள பயன்படுத்தினோம். அப்புறம் அந்த கலர்ஸ் சரிதான்னு கல்கத்தாலேர்ந்து படம் பார்த்துட்டு ஒரு குடுகுடு தாத்தா பேசுறார். நானும் வெள்ளைக் கார பொண்ண சைட் அடிச்சவன்தான். என் கதைய திருடிட்டியா தம்பின்னு கேட்டார். எனக்கு இந்த ஒரு போன் கால் போதும்ன்னு கண் கலங்கிங்ட்டேன்.

அடுத்த படம் பத்தி முடிவு பண்ணிட்டீங்களா?

வாய்ப்பே இல்ல! இன்னும் மதராஸப்பட்டனத்த விட்டு நான் வேளியே வரல. துங்கினா என்னோட கேரக்டர்ஸ் கனவுல வர்றாங்க. இன்னும் ஆறு மாசத்துகாவது அதுக்குள்ளயேதான் நான் வாழ்ந்தாகணும். இதை நான் சுமையா நினைக்கல. ஏற்கனவே ஹிந்தியில ஒத்துக்கிட்ட ஒரு புராஜெட் இருக்கு. அதுக்கான வேலைகள மெல்ல மெல்ல ஆரம்பிக்கணும். அதுக்கு முன்னாடி தமிழ்ல பண்ற சூழலும் வரலாம். எது முதல்லன்னு இன்னும் முடிவு பண்ணல! திட்டமிட்டு பண்றதுதான் சினிமா. ஆனால் பல சமயங்கள்ல நாம திட்டமிடாமலும் சினிமா நம்மள நகர்த்திகிட்டு போகும்.  இரண்டுக்குமே தயாரா இருக்கனும்.

சந்திப்பு: ஜோதி ஸ்வரூபன்

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்