இரண்டு இயக்குனர்கள்! இரண்டு எழுத்தாளர்கள்!
விளம்பர உலகின் ராஜாக்கள் என்று புகழப்படும் இரட்டை இயக்குனர்களான ஜேடி - ஜெர்ரி இருவரும், இலக்கிய தாகம் கொண்ட இயக்குனர்களின் பட்டியலில் இடம்பிடித்தவர்கள். இவர்கள் தங்களது தந்தையர்கள் ராபர்ட் -  ஆரோக்கியம் நினைவாக  அறக்கட்டளை அமைத்து, கடந்த நான்கு ஆண்டுகளாக  தமிழின் மூத்த எழுத்தாளர்களுக்கு சாரல் விருது வழங்கி கௌரவித்து வருகிறார்கள்.
 
2011- ஆம் ஆண்டுக்கான சாரல் விருது,  தாமிரபரணியின் இருகரைகளாக இருந்து நெல்லை வாழ்வின் அற்புதங்களை எழுத்தில் வடித்த எழுத்தாளர்களான வண்ணநிலவன், வண்ணதாசன் இருவருக்கும் வழங்கப்பட்டது.  இரு எழுத்தாளர்களுக்கும் முறையே  50 ஆயிரம் ரூபாய்க்கான காசோலையும், சிற்பி வித்யாஷங்கர் ஸ்தபதியின் சிற்பமும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்பட்டது. எழுத்தாளர் அசோகமித்ரன், திலீப்குமார், ஞானக்கூத்தன் ஆகியோர் இவர்களுக்கு முன்பு விருது பெற்றவர்கள்.  

வண்ணதாசனுக்கு எழுத்தாளர் பா.செயப்பிரகாசமும், வண்ணநிலவனுக்கு எழுத்தாளர் நாஞ்சில்நாடனும் சாரல் விருதை வழங்கினர். "நாளையோ மறுநாளோ எங்கள் வீட்டுக்கு யார் வந்தாலும் அவர்களை சாரல் விருது வரவேற்கும். வித்யாஷங்கரின் இச்சிற்பத்தை சுவரில் எங்கு வைக்கலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். என் பொக்கிஷங்களில் ஒன்றாக சாரல் விருது மாறியிருக்கிறது. நான் எழுதவந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள இந்த தருணத்தில் நான் மிகவும் மதிக்கும் எழுத்தாளர் ராமச்சந்திரன் என்கிற வண்ணநிலவனுடன் பாராட்டப்பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது" என்று தனது  ஏற்புரையில் குறிப்பிட்ட வண்ணதாசன், ‘‘எனக்கு உயரப்பறத்தல் முக்கியமல்ல, பறத்தல் முக்கியம்” என்றார்.

வண்ணநிலவனை கோயில் யானைக்கும், வண்ணதாசனை கோயில் தேருக்கும் ஒப்பிட்டு சுவாரசியமாகப் பேசிய எஸ். ராமகிருஷ்ணன், அவர்களின் எழுத்தைப் படித்தும் பிடித்தும் வளர்ந்தவன் நான் என்றார். அந்த இருவரும் ஏற்றிய அகல்விளக்கின் வெளிச்சத்தில் கவிஞராக உருவானேன் என்றார் பாடலாசிரியர் நா. முத்துக்குமார். தாமிரபரணியின் இரு கரைகளாக இருந்து ஒருவர் வாழ்வின் இருளையும், ஒருவர் வாழ்வின் அழகையும் எழுதியதாகக் குறிப்பிட்டார் நாஞ்சில்நாடன். வரவேற்புரையை இயக்குநர் ஜேடியும், நன்றியுரையை இயக்குநர் ஜெர்ரியும் வழங்கினார்கள். 

விழாவில் ஞானராஜசேகரன், நடிகை ரோஹிணி, எழுத்தாளர் திலீப்குமார், பாவண்ணன், இயக்குனர் அழகம்பெருமாள், இயக்குனர் ராம், பாரதி மணி, ஒளிப்பதிவாளர் ராஜசேகர், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன், இரா. முருகன் உள்பட பல முக்கியமான கலை இலக்கியவாதிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். சினிமாவும் இலக்கியமும் சங்கமித்த சமீபத்திய விழாக்காளில் பார்வையாளர்களுக்கு நிறைவான விழாவாக அமைந்தது இயக்குனர்கள் ஜேடி- ஜெர்ரியின் இலக்கிய காதலைக் காட்டிய இந்த சாரல் விருது விழா!

திரை தெனாலி


 

 

   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்