காங்கிரஸின் முரட்டுப் பிடிவாதம்!

தொடர்ச்சியான வெற்றிகளும், எதிராளிகள் வலுவிழந்து காணப்படும் சூழ்நிலையும், எப்படிப்பட்டவரையும் மமதையின் உச்சத்துக்குக் கொண்டுசென்றுவிடும். மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசில் சில அமைச்சர்களின் நடவடிக்கைகள், காங்கிரஸ் இப்படிப்பட்ட மமதைச் சிகரத்தின் உச்சியில் அமர்ந்திருக்கிறதோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதை அவர்கள் நியாயப்படுத்தும் விதம்தான் அதைவிடக் கவலை தருவதாக இருக்கிறது.

விலைவாசி உயர்வு குறித்த ஒத்திவைப்புத் தீர்மானம், நாடாளுமன்றத்தைத் தொடர்ந்து ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரதிய ஜனதா, பல காலமாக தொடர்ச்சியான போராட்டங்களை இது தொடர்பாக நடத்திவருகிறது. ஆர்ப்பாட்டங்கள், பேரணிகள் என அந்தக் கட்சியின் தலைவர்கள் தினம் தினம் வீதிகளில் நடக்கின்றனர். கோடிக்கணக்கான மக்களிடம் கையெழுத்து இயக்கத்தையும் நடத்தியது பா.ஜ.க. இன்னொருபுறம் கம்யூனிஸ்ட் கட்சிகளும் போராடுகின்றன. ஆனால், விலைவாசியைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த உறுதிமொழியும் அரசிடமிருந்து இல்லை. காந்தியால் வலுவடைந்த காங்கிரஸ் கட்சி, காந்தியவழியிலான போராட்டங்களுக்குத் தரும் மரியாதை இதுதான்!

இது ஒருபுறமிருக்க, இந்த விவகாரத்தில் ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொரு விதமாகப் பேசுகின்றனர். நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி சில வாரங்களுக்கு முன்பு, ‘பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்தினால், அதன் எதிரொலியாக எல்லா பொருட்களின் விலைவாசியும் ஏறும். அதனால் விலை உயர்வுக்கு உகந்த தருணம் இது அல்ல!’ என்று சொல்கிறார். நிதி அமைச்சர் இப்படிச் சொன்ன சில நாட்களில் பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது. நாடு தழுவிய பந்த் நடத்தி, கிட்டத்தட்ட பாரதிய ஜனதாவும் கம்யூனிஸ்டுகளும் ஓரணியில் திரண்டபோதும் காங்கிரஸ் அரசு, விலைவாசி உயர்வின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளவில்லை.

பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோரா இதை நியாயப்படுத்திய விதம் கொடூரமானது. ‘‘ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டில் 12 ரூபாய்க்கு இங்கு விற்கிறது. மண்ணெண்ணெய் விலை உயர்வால் ஒரு குடும்பத்துக்கு ஒரு நாளைக்கு ஐம்பது பைசா மட்டும்தானே கூடுதலாக செலவாகப் போகிறது!’ என்கிறார் அவர். ஒரு லிட்டர் தண்ணீரை 12 ரூபாய் கொடுத்து வாங்கிக் குடிக்கும் குடும்பங்களா இங்கு மண்ணெண்ணெய் வாங்கி சமைக்கின்றன? ரேஷன் கடையில் 2 ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுத்தாலும், அதை வாங்கத் திராணியற்ற பல்லாயிரம் குடும்பங்கள் இங்கு இருக்கின்றன என்பதால்தானே ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியைத் தர நேர்கிறது. பஞ்சத்தில் பரிதவிக்கும் ஆப்ரிக்க தேசங்களைவிட மிக மோசமான வறுமைச் சூழலில் இந்தியாவில் பல கோடி குடும்பங்கள் உழல்கின்றன என்ற உண்மை, சமீபத்தில்தானே ஐ.நா. சபையின் துணையுடன் நடந்த ஒரு ஆய்வில் வெளியானது.

இன்னொரு பக்கம் வேளாண்மைத் துறை அமைச்சர் சரத் பவார், ‘என்னுடைய பதவிக்காலத்தில் பல விவசாயிகள் வசதிமிக்கவர்களாக மாறியிருப்பது சந்தோஷம் தருகிறது’ என்று கூசாமல் சொல்கிறார். நாட்டிலேயே கடன் தொல்லையால் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலமாக அவரது சொந்த மாநிலமான மகாராஷ்டிராதான் திகழ்கிறது.

மாவோயிஸ்ட் பிரச்னை உள்ளிட்ட உள்நாட்டு பாதுகாப்பு விவகாரங்களை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கையாளும்விதம் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் சமீபகாலமாக எழுந்திருக்கின்றன. ‘அறிவுஜீவித்தனமான அராஜகத்தோடு அவர் செயல்படுவதாகவும், இதனால் பழங்குடியினர் பாதிக்கப்படுவதாகவும்’ காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கே குற்றம் சாட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தில் போலி என்கவுன்ட்டர் விவகாரத்தில் மாநில உள்துறை அமைச்சர் அமீத் ஷாவுக்கு இருக்கும் தொடர்புகளை ‘டெஹல்கா’ வார இதழ் அம்பலப்படுத்தியது. இதைத் தொடர்ந்து எழுந்த நெருக்கடியில் சி.பி.ஐ. போலீஸ் அவரை நெருக்க, பதவியை ராஜினாமா செய்துவிட்டு அவர் கைதாக நேர்ந்தது. இதைத் தொடர்ந்து, ‘மத்தியில் ஆளும் காங்கிரஸ் கூட்டணி அரசு, சி.பி.ஐ. போலீஸை தவறாகப் பயன்படுத்துகிறது’ என்ற குற்றச்சாட்டு எழுந்தது. ‘அப்படி இல்லை’ என்ற மறுப்பு காங்கிரஸ் தரப்பிலிருந்து வரவில்லை. ‘அமீத் ஷா இப்போது மாட்டியிருக்கிறார். அடுத்ததாக மாட்டப்போவது குஜராத் முதல்வர் மோடிதான்’ என்று அமர்த்தலாக பேட்டி கொடுத்து, சி.பி.ஐ.க்கு இருக்கும் கொஞ்சநஞ்ச மரியாதையையும் காலி செய்கிறார்கள் காங்கிரஸ்காரர்கள்.

இதே ரேஞ்சில் தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டதாக கற்பனை செய்துகொள்ளும் சில தலைவர்கள், ‘நூறு சீட் கேட்க வேண்டும்’ என்று இப்போதே சவடால் பேச்சை ஆரம்பித்து, முதல்வர் கருணாநிதியின் தூக்கத்தைக் கெடுக்கிறார்கள்.

மக்களைப் பற்றிக் கவலைப்படுவதை மறந்ததால்தான் கடந்த 96ம் ஆண்டில் காங்கிரஸ் சிதையத் தொடங்கியது. அதை மீண்டும் ஓரளவுக்காவது கட்டமைக்க எட்டு ஆண்டுகள் ஆனது. திரும்பவும் பழைய பாதையில் அது பயணித்தால், மீளும் வழிகள் தென்படாமல் போய்விடக்கூடும்!               


   தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும் * Indicates mandatory fields   

Name* :
E-Mail_id* :
Phone No :
Address :
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comments(500)* :
 
 

கருத்துக்கள்